திருத்தந்தையின் நத்தார் வாழ்துச்செய்தி.

இயேசுவே உண்மையான அமைதியின் பிறப்பிடம் என தெரிவித்துள்ள திருத்தந்தை பதின்நான்காம் லியோ உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நேற்று ( 25.12.2025 ) அன்று ‘ஊருக்கும் உலகிற்கும்’ (Urbi et Orbi) என்ற தனது முதல் சிறப்புச் செய்தியையும் ஆசீரையும் வழங்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இயேசுவின் பிறப்பு என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது விண்ணகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த ‘உண்மையான அமைதி’
”இயேசு வறுமையையும் நிராகரிப்பையும் ஏற்றுக்கொண்டார்; ஒடுக்கப்பட்டவர்களுடனும் ஒதுக்கப்பட்டவர்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அன்பு இல்லாதவர்கள் மீட்கப்படுவதில்லை. மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, நம் தவறுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே உலகம் மாறும்,” என குறிப்பிட்டார். மேலும் போரினாலும் வன்முறையினாலும் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளுக்காகச் சிறப்பாக வேண்டிக்கொண்டார்.
இதன்போது லெபனோன், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் சிரியாவில் அமைதி நிலவ வேண்டும். உக்ரைனில் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். சூடான், காங்கோ, மாலி போன்ற நாடுகளில் வன்முறை ஒழிய வேண்டும்.மியான்மார் நாட்டில் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை கிடைக்க வேண்டும். தாய்லாந்து, கம்போடியா இடையே நட்பு மலர வேண்டும். தெற்காசியா மற்றும் ஓசியானியாவில்ஸ இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். துன்பப்படுபவர்களுடன் இயேசு இருக்கிறார். காசாவில் எல்லாவற்றையும் இழந்தவர்கள், ஏமனில் பசியால் வாடுபவர்கள், புலம்பெயர்ந்தோர், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் சிறைவாசிகள் ஆகியோருடன் கடவுள் எப்போதும் இருக்கிறார்.

“மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏழைகளையும் எளியவர்களையும் நாம் வரவேற்கும்போது, அங்கே இயேசுவையே வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் சில நாட்களில் ‘எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு’ நிறைவடைய உள்ளதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, “புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இயேசுவின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். அவரே நமது நிரந்தரமான எதிர்நோக்கு,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.தொடர்ந்து அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
