பாதுவா நகரோனின் பாதுகாவலில் ஒரு பயணம்...

எமது சுன்னாகம் தூய் அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற அற்புதங்களில் வரலாறு களாகிய அற்புதங்களில் சிலவற்றை தொகுக்க எண்ணியுள்ளேன். இதன்படி என்னுடைய அன்னை அமரர் அ.மேரியூலியற் அவர்கள் எமக்கு சொல்லிச் சென்ற கதைகளில் இருந்தும். மூத்தோர், முன்னோரின் அனுபவங்களில் இருந்தும் இதைத் தொகுக்கின்றேன் .

எனது தாயார் ஒருமுறை எமது ஆலயத்திலுள்ள சந்தன மரத்தில் செய்யப்பட்ட புனிதரின் திருச்சொரூபம் மிகவும் புனிதமும் புதுமையும் நிறைந்ததெனக் கூறிச் சொல்லிய கதை.

எமது தேவாலயத்திலிருக்கும் புனித அந்தோனியாரின் சொரூபம் முன்னர் தேவாலயம் அமைந்திருக்கும் இடத்திலிருந்த காணிக்கை மாதாவின் ஆலயத்தில் இருந்தது. இதன்போது பிற சமயவாதிகளால் அவ் அன்னையின் ஆலயம் தீக்கிரையாக்கப்பட ஆலயம் முழுவதும் எரிந்து சாம்பலாகிய போதும் புனித அந்தோனியாரின் திருச்சொரூபமும் அதன் கூடும் எரியாமல் இருந்துள்ளது. பின்னரே அவ்விடத்தில் புனித அந்தோனியாருக்கு ஆலயம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு காலங்கள் கடந்தபோது மேலைத்தேயத்தை சேர்ந்த அருட்தந்தை ஒருவர் பங்குத் தந்தையாக இவ்வாலயத்தை பொறுப்பேற்றுள்ளார். அவர் ஒருமுறை இங்குள்ள அந்தோனியாரின் சொரூபம் சிறிதாக உள்ளமையால் அதை மாற்றி பெரிய சொரூபமாக வைப்போம் என எண்ணி புதிய சொரூபம் ஒன்றை ஆலயத்திற்குக் கொண்டு வந்து மறுநாள் மாற்றி வைப்போம் என எண்ணிவிட்டு அன்று இரவு தூங்கியுள்ளார். இரவு நேரம் அவர் தூக்கத்தில் இருந்தபோது கட்டிலிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். இதையடுத்து அப்பங்குத்தந்தை சொரூபத்தை மாற்றி வைக்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளார்.

இதுபோன்று ஒருமுறை எமது ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இவ் அன்ன தானத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த இந்து சகோதர சிறுவன் ஒருவன் வாங்கிக் கொண்டு வீடு சென்றுள்ளான். சிறுவன் கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து அன்னம் கொண்டு வந்ததை அறிந்த அச்சிறுவனின் தாய் அவ் அன்னத்தை உண்ண வேண்டாம் என தடுத்து அவ்வுணவை மண்ணிற்குள் குழிதோண்டி புதைத்திருக்கின்றார்.

பின்னர் மறுநாள் பாடசாலை சென்ற சிறுவனுக்கு பார்வை மங்கத் தொடங்கி முழுவதுமாக பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதை தாயிடம் அச்சிறுவன் கூற தாய் நடந்தவற்றை தம் உறவினர், அயலவரிடம் கூறியுள்ளார். இதன்போது தேவாலய அன்னதானத்தை புதைத்ததையும் கூறியுள்ளார்.

அப்போது அயலவர்கள் புதைத்த அந்த அன்னத்தை எடுத்து சிறுவனுக்கு கொடுங்கள் என்று அறிவுரை கூற தாயும் அவ்வாறே அன்னத்தை சிறுவனுக்குக் கொடுப்பதற்காக அன்னத்தை புதைத்த இடத்தில் தோண்டிய போது அவர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவ அன்னம் புதிதாக சமைக் கப்பட்டது போன்று சூடாக இருந்துள்ளது.

அதை எடுத்து அச்சிறுவனுக்கு ஊட்டிய போதே மீண்டும் அச்சிறுவனுக்கு பார்வை கிடைத் துள்ளது. இதன்பின் அவர்கள் அந்தோனியாரின் வல்லமையை உணர்ந்து கொண்டனர்.

இப்புதுமைச் சம்பவத்தை திருமதி.அ.அதிசயராணி அவர்களிடமிருந்து அறிந்துகொண்டதன்படி எழுதியுள்ளேன்.

எம் ஆலயத்தில் நடந்த இன்னுமோர் அற்புத சம்பவம்.

1987ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இந்திய இராணுவம் இலங்கையின் தமிழர் பகுதிகளை தம்வசப்படுத்தியிருந்தது. தமிழர்கள் இந்திய இராணுவத்தால் உடல், உள. பாலியல் ரீதியில் கொடுமைகளை எதிர்கொண்டனர்.

அந்த சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்தை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதனால் தமிழர் பிரதேசம் பெரும்போரை எதிர்கொண்டது.

அமைதிப்படை என்ற பெயரில் வந்து தமிழர்களையும் ஒடுக்க நினைத்து தமிழர் மீது சித்திர வதைகளை கட்டவிழ்த்து விட்டது இந்தியப்படை. இந்தியப்படைகளின் தாக்குதலுக்கு பயந்த யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மக்கள் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் தஞ்சடைந் திருந்தனர். இதன்போது ஆலயப் பங்குத்தந்தையாக அருட்தந்தை யோகராஜா அடிகள் பங்கைப் பொறுப்பெடுத்திருந்தார்.

இடம்பெயர்ந்து ஆலயத்தில் தஞ்சமடைந்த மக்களுக்கு ஆலய இளையோர் மன்றம், உணவு, மருத்துவம், அடிப்படை வசதிகள் என்பவற்றை பெற்றுக்கொடுக்க முழு மூச்சுடன் செயற்பட்டனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது ஆலய இளைஞர்கள் சிலர் ஆலய வளாகத்தை விட்டு வெளியே செல்ல ஆயத்தமாகியுள்ளனர். அவர்கள் ஆலய பிரதான வாயிலை நெருங்கிய போது கல்லறை ஆண்டவர் பிரதான வாயிலை மறித்தபடி நின்றுள்ளார். இதைக் கண்டதும் இளைஞர்கள் ஆலயத்தினுள் வந்து பார்த்த போது கல்லறைக் கூண்டுக்குள் ஆண்டவரின் திருச்சொரூபம் அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

அன்றைய தினம் இந்திய இராணுவத்தால் பாரிய அசம்பாவிதங்கள் நடைபெற்றதாகவும் இவர்கள் வெளியே செல்லாததால் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப் படுகின்றது. சாட்சியங்கள் இன்றும் உண்டு.

இவ்வாறான பல அற்புதங்கள் இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ளன. உடமைகள் திருடப்பட்ட போது புனிதரின் பதியில் வந்து நேர்த்தி வைக்கப்பட்டு திருடப்பட்ட பொருட்கள் மீளவும் அவர்களது வளவிற்குள் போடப்பட்டிருந்த சம்பவம் இரவு வேளைகளில் புனிதர் ஆலயத்திற்குள் மெழுகுதிரி. வேதாகமத்துடன் வலம் வருதல், புனிதரின் வேண்டிய வரங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் கிடைத்தல், புனிதரின் உதவியால் மனமாற்றம் போன்ற பலகோடி அற்புதங்கள் இவ்வாலயத்தில் நடைபெற்றுள்ளதோடு தற்போதும் பல கோடி புதுமைகள் புனிதரின் பரிந்துரையால் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

அ.அக்னஸ் மேரி கெமில்டா

கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்.

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்

Scroll to Top