175 ஆண்டு நிறைவை கொண்டாடும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயமும் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் வருடாந்த விளையாட்டு விழாவும்
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 175ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் நினைவு கூரும் இந்த நேரத்தில் நூற்றாண்டை கடந்து வரலாறு படைத்து நிற்கும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா தொடர்பான வரலாற்றை மீள்பதிவு செய்ய முனைந்துள்ளேன், வரலாறு என்பது இறந்த காலம் தொடர்பிலானது ஆகும். இறந்தகால மனித் நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும். ஒரு சமூகம் தொடர்பான வரலாறு அச்சமூகத்தில் வாழ்ந்த மனிதரின் நடத்தைக் கோலங்களின் வெளிப்பாடாக அமைகின்றது. ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கானது சமூக உறவுகளின் ஊடே கட்டியெழுப்பப்படுகின்றது.
சமூக உறவுகள் சமூகத்தின் சமய, பொருளாதார, கலை, பண்பாட்டு விழுமியங்கள். வாழ்க்கைக் கோலங்கள் என்பவற்றின் ஊடே வளர்த்தெடுக்கப்படுகின்ற ர்த்தெடுக்கப்படுகின்றது. ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாயின் அச்சமூகத்தின் உறவு நிலை மேம்படையவேண்டும். சமூக உறவு முறைக்கு அடிப்படையாக அமைவது அச்சமூகம் கட்டுக்கோப்பான நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில் அமைந்து காணப்படுவதிலேயே ஆகும். இந்த வகையில் நோக்குகையில் சுன்னாகம் புனித அந்தோனியர் ஆலய மக்கள் ஆலயத்தை மையமாக வைத்து நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில் அவர்களுக்கிடையேயான உறவு வளர்க்கப்பட்டு வருகின்றது. அதாவது புதிய அந்தோனியார் ஆலய சமூக மக்கள் பங்குத்தந்தை ஒருவரின் தலைமையில் நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவ்வாலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆலய வழிபாடுகள், கலை, கலாசார நிகழ்வுகள், கவிப்பணிகள், மன்ற செயற்பாடுகுகள். விளையாட்டு நிகழ்வுகள் என்பன சமூக உறவை மேலும் வளர்த்துக்கொள்ள உதவி புரிகின்றது.
மேற்குறிப்பிட்ட உன்னதமான சமூக உறவை மையமாகக் கொண்டு எமது முன்னோரால் ஆலயத்தில் நூற்றாண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை முன்னெடுத்துச் செல்லப் படுகின்ற புனித அந்தோனியார் ஆலய விளையாட்டு விழாவைப் பற்றிய வரலாற்று ஆய்வொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.
20ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இவ்விளையாட்டு விழா தோற்றம் பெற்றது என அறியமுடிகின்றது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அக்காலத்திற்கு உகந்ததான பொருளாதார மற்றும் ஏனைய வசதிகளின் அடிப்படையில் விளையாட்டு விழா நடாத்தப்பட்டு வந்துள்ளது. சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் ஆலய பங்கு மக்களால் முன்னெடுத்து நடாத்தப்பட்டு வந்த இவ்விழாவில் ஆலயம் சார்ந்த இந்து சகோதரர்களும் பங்குபற்றி தமது ஆதரவை தெரிவித்திருந்தனர் எனக் கூறப்படுகின்றது. நத்தார் புதுவருட விழாக்கள் எல்லாம் இவ்விளையாட்டு விழாவின் ஊடாகத்தான் நிறைவு செய்யப்பட்டு வந்துள்ளது. பெரும்பாலும் புதுவருடத்தைத் தொடர்ந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இவ்விழாவானது அந்தோனியார் ஆலயத்தையும் சுன்னாகம் நகரத்தையும் விழாக்கோலம் பூண வைத்திருக்கும். தோரணங்களாலும், வாழை மரங்களினாலும் அந்தோனியார் ஆலய முன் வீதி அலங்கரிக்கப்பட்டு இருப்பது விழாவின் மகிமையை எடுத்துக்காட்டி நிற்கும். சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய மக்களின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிக்காட்டி நிற்கும் விழா சுன்னாகம் அந்தோனியார் ஆலய விளையாட்டு விழா என்றால் அது மிகையாகாது.
வருடந்தோறும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த நிகழ்வின் சிறப்பம்சம் வயது வேறுபாடின்றி பாலகர்கள், சிறுவர்கள், இளையோர், தாய் தந்தையர், முதியோர் என பலவகைப் பட்டவர்களும் இணைந்து கொள்வதாகும். இதற்கேற்ற வகையிலேயே விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே நாம் இவ்விழாவை புனித அந்தோனியார் சமூக மக்களின் விழா எனக் குறிப்பிடுகின்றோம்.
20ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் அதாவது 1900ஆம் ஆண்டுகளில் சிறுஅளளில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வந்த விழா 1930களில் மெருகூட்டப்பட்டு புதுப்பொலிவுடன் நடாத்தப்பட்டு வந்தது. 1935களில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய மண்டபத்தில் இயங்கி வந்த இரவுநேரப் பாடசாலையில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்த மரியாம்பிள்ளை அருளானந்தம், பேதறு, ஞானப்பிரகாசம், அருட்சகோதரர் பேதுறுசவியேல் ஆகியோர் இவ்வருடாந்த விளையாட்டு விழாவிலும் முக்கியமாகச் செயல்பட்டார்கள். இறப்பியல் பேரின்பநாயகம் அவர்களால் வருடாந்த விளையாட்டுவிழா சிறப்பு மலர் ஒன்றிற்கு (1988) வரையப்பட்ட கட்டுரை ஒன்றில் மேற்கூறப்பட்ட மூவரையும் விளையாட்டு விழா மும்மூர்த்திகள் என குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகின்றது. மேற்படி குறிப்பிட்ட இரவுநேர ஆங்கிலப் பாடசாலையில் தான் அவர்களிடம் ஆங்கிலம் கற்றதையும் அவர் அவ் விழா மலரில் குறிப்பிட்டுள்ளார்.
1940களிற்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் பங்கிராஸ் அவர்களும் இவ்விளையாட்டு விழா நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி உள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது. விளையாட்டு விழா மட்டுமன்றி இளைஞர்களை ஒன்று திரட்டி கரோல் சேவை நடத்துவதிலும் முக்கிய இடம் வகித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
வைத்திய கலாநிதி எட்வேட் என்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி இவ்விளையாட்டு விழாவிற்கு வணபிதா ஸ்கூர்மன் அடிகள். வணபிதா பெஞ்ஞமின் அடிகள் ஆகியோர் ஊக்கமளித்து முக்கிய பங்காற்றியுள்ளனர் என அறியப்படுவதுடன் 1945ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த பீற்றர் அடிகளார் வளரும் இளைஞர்களுக்கென சுன்னாகம் புனித அந்தோனியார் இளைஞர் மன்றத்தை உருவாக்கினார் எனவும் இம்மன்றமானது ஆன்மீக மற்றும் கலை, பண்பாட்டு செயற்பாடுகளில் ஆர்வம் காட்டினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் அதாவது 1950களில் இவ்விளையாட்டு விழாவை ஒழுங்கமைத்து செயற்படுத்தியவர்கள் வரிசையில் ம.வெளிச்சோர் ஆபரணம், Dr.G.ஜோர்ஜ். யோ. வேதநாயகம். யோ.வின்சென்ற். இ.பேரின்பநாயகம், அ.அமிர்தநாதன், ஸ்.அந்தோனிப்பிள்ளை ஆசிரியர். ஆ.கென்றி, யோ. திருஞானம் ஆசிரியர், தாவீது ஆசிரியர், ச.லியோ ஆகியோர் முக்கியம் பெறுகின்றனர்.
1960களில் விளையாட்டு விழாவை ஒழுங்கமைத்தவர்கள் வரிசையில் சீ.வரப்பிரகாசம். யோ. யேசுதாசன். அ.அருளப்பன், சி.தர்மராசா, Dr.G.எட்வேட் மோ.யோசேப், யோ ஞானப்பிரகாசம். அ.அருட்பிரகாசம், செ.சிலவேஸ்ரர், அ.அல்பிறட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கியுள்ளனர். இக்காலப்பகுதியில் பெனற இல்லம் ஏபிரகாம் இல்லம் என இரு இல்லாங்கள் காணப்பட்டன.
1965, 70களில் முன்னையவர்களுடன் இணைந்து ச.சாந்தகப்பர். இ.தங்ககுலசிங்கம். ம.சந்தியாப்பிள்ளை, ம.தைரியநாதன், ம.கிறீஸ்துராஜன், கு.பாக்கியநாதன் ஆகியோரும் முன்னையவர்களுடன் இணைந்து விளையாட்டு விழா சிறப்படைய பணிபுரிந்துள்ளனர்.
இவ்விடத்தில் திரு.அ.அல்பிரட் அவர்கள் விளையாட்டு விழாவிற்கு செய்த பங்களிப்பை விட அவர் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணியை எளிதில் மறந்து விடமுடியாது. ஆலயத்தில் தற்போது இயங்கிவரும் பாலர் பாடசாலையின் தோற்றத்திற்கு காரணமாக இருந்ததுடன் தோற்றம் பெற்றதில் இருந்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் தனி ஒருவராக அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று திறம்பட இயக்கி வந்தார். இக்காலப்பகுதியில் இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் பெருமளவானோர் கல்வியில் சிறந்து விளங்கி இன்று உயர் நிலைகளில் இருப்பதைக் காணமுடிகின்றது.
இவ்விளையாட்டு விழாவில் 60களின் காலப்பகுதியில் ஆசிரியர் மார்க்கண்டன் விளையாட்டு ஆரம்பிப்பாளராக கடமையாற்றியமை முக்கியமான ஒன்றாகும். இவ்விளையாட்டு விழாவானது 1970களின் முற்பகுதி வரை நிறுவன ரீதியற்ற வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டதை காணக் கூடியதாக உள்ளது. அதாவது விளையாட்டு விழாவில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டு விழா நடைபெறும் தினத்திலேயே காலை பூசை முடிந்ததும் விழாவிற்கான பணத்தைச் சேகரித்து பரிசில்களை அன்றைய தினமே வாங்கி விளையாட்டு விழா நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
1970களின் நடுப்பகுதியில் அந்தோனிப்பிள்ளை அமிர்தநாதனை தலைவராகவும் அ.யேசுதாசனை செயலாளராகவும் கொண்டமைந்த வகையில் இயங்கிய புனித அந்தோனியார் அறிவகம் என்ற அமைப்பு ஆலயத்தில் நூலகம் ஒன்றை நடாத்தியதோடு விளையாட்டு விழாவையும் ஒரு சில வருடங்கள் நடாத்தியுள்ளனர்.
1965இற்கு பிற்பட்ட காலங்களில் இருந்து விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஞாபகம் எனக்கு இருக்கின்றது. அக்காலப்பகுதியில் இருந்து 1975ஆம் ஆண்டு வரையில் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒருவனாக இருந்துள்ளேன். இக்காலப்பகுதியில் இடம்பெற்ற விளையாட்டுவிழா தொடர்பான பதிவுகள் எனது மனதில் பசுமரத்தாணி போல் இன்று வரை பதிந்திருக்கின்றது. இக்காலப்பகுதியில் விளையாட்டு நிகழ்வுகளின் ஆரம்பிப்பாளராக கடமை யாற்றிய அந்தோனிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் தனக்கே உரித்தான ஆங்கில புலமையினூடே விளையாட்டுக்களை ஆரம்பித்து வைப்பது மிக சிறப்பானதாக அமைந்திருக்கும். அக்காலப் பகுதியில் விளையாட்டை ஆரம்பிப்பதற்கு விசில் பயன்படுத்துவதில்லை. வெடி ஓசையினூடாகவே ஆரம்பிக்கப்படுவது வழக்கம். இரும்பினாலான குழாய் ஒன்றினுள் கெந்தகப் பவுடரை இட்டு இன்னொரு இரும்புக் கம்பியினால் அதை அழுத்தும் போது அந்த வெடிச்சத்தம் கேட்கும் ஒரு இளைஞன் இதற்கென தயார் நிலையில் இருப்பார். இவ்வாறாகவே ஒவ்வோர் விளையாட்டும் ஆரம்பிக் கப்படுவது வழக்கம்.
இக்காலப் பகுதியில் திருவாளர் யோசேப் வேதநாயகம் அவர்கள் அறிவிப்பாளராக கடமையாற்றியதுண்டு. மிக சுவாரசியமான வகையில் அவர் அறிவிப்புப் பணிகளை மேற் கொள்வார். மற்றும் வயது வேறுபாடு இன்றி சகலரும் பங்குபற்றக்கூடிய வகையில் விளை யாட்டுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இங்கு வயதடிப்படையில் சில விளையாட்டுக்கள் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும். மற்றும் பொது விளையாட்டுகள் என்ற வகையில் முட்டியடித்தல், கயிறு இழுத்தல். சுருட்டுபற்ற வைத்தல், சிகரட் பற்றவைத்தல் போன்ற நிகழ்வுகள் ஆண்களுக்கும் தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல் போன்ற நிகழ்வுகள் மணமான பெண்களுக்கும் இடம்பெறுவதுண்டு. சுருட்டு பற்றவைத்தலில் போட்டியாளராக செ.சூசைப்பிள்ளை. அ.அம்புறோஸ், வை.யக்கோப்பிள்ளை, அ.சூசைப்பிள்ளை, யோ.வின்சன்ற் (குரு) போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். மேற்குறிப்பிட்ட போட்டிகளில் சில போட்டிகள் இன்று வரை நடைபெறுவதைக் காணமுடிகின்றது.
1970களின் பிற்காலப் பகுதிகளில் இருந்து புனித அந்தோனியார் இளைஞர் மன்றத்தின் முழுமையான ஒழுங்கமைத்தலின் கீழ் இன்று வரை இவ்விளையாட்டு விழா இடமபெற்று வருவதைக் காண முடிகின்றது. 1978ஆம் ஆண்டு செபமாலை யேசுதாசன் தலைமையில் இளைஞர் மன்றம் இயங்கிய காலத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கௌரவ அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களும் அவரது பாரியாரும் அமிர்தலிங்கம் மங்கையற்கரசி அவர்களும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
.
மற்றும் 1960களில் இருந்து 1983 வரை இவ்விளையாட்டு விழா மேடையை அலங்கரித்த வர்களில் உடுவில் தொகுதி பிற்பட்ட காலங்களில் மானிப்பாய்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னராக இருந்த கௌரவ. V.தர்மலிங்கம் ஐயா அவர்கள் முதனமையானவர் ஆவார். இலங்கையர் என அழைக் கப்படும் திரு.வி.தர்மலிங்கம் ஐயா அவர்கள் எமது விளையாட்டு விழாவில் தனக்கு இருந்த வேலைப்பளு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தொடர்ச்சியாக 23 வருடங்கள் எமது விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமை எமக்கு கௌரவமானதாகும். வருடப்பிறப்பைத் தொடர்ந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை நாம் மறந்தாலும் அவர் மறந்ததேயில்லை. 1982ம் ஆண்டில் விளையாட்டு விழா தொடர்பான சம்பவம் ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் தெரியப்படுத்த விரும்புகின்றேன். அவ்வாண்டு மன்றத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த நான் மன்ற உறுப்பினர் அ.ஸ்கூர்மன் அல்பிறட் சகிதம் விளையாட்டு விழாவிற்கு ஐயா அவர்களை அழைக்கச் சென்ற சமயம் அழைப்புக்கடிதத்தைப் பெற்ற அவர் கடிதத் திகதியை பார்க்காமலேயே தனது டயரியைப் பார்த்து எமக்கு சம்மதம் தெரிவித்தார். அதாவது டயரியை எடுத்து வருட முதல் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதை ஏற்கனவே குறித்து வைத்திருப்பதை எமக்குத் தெரியப்டுத்தினார். உண்மையிலேயே எமக்கு ஆச்சரியமாக இருந்தது.எவ்வளவு தூரம் அவர் அந்தோனியார் சமூகத்திற்கு மதிப்பளித்திருக்கின்றார் என்பதும் மன்றம் வருட முதல் ஞாயிற்றுக் கிழமையை தொடர்ச்சியாக விளையாட்டு விழா நாளாகத் திட்டமிடுகின்றது என்பதும் எம்மையே அதிசயிக்க வைத்த ஒன்றாக காணப்படுகின்றது.
தர்மலிங்கம் ஐயா தவிர எமது விழா மேடையை சிறப்பித்த விருந்தினர் வரிசையில் எமது பங்கை சேர்ந்தவர்களாக டாக்டர் ஜி.ஜோர்ஜ் மற்றும் ஆசீர்வாதம் கென்றி இருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இதில் டாக்டர். ஜி.ஜோர்ஜ் அவர்கள் ஆயுள்வேத வைத்தியத்துறையில் வடமாகாணத்தில் சிறப்புப் பெற்று விளங்கியவர் ஆவார், கட்டணத்தை எதிர்பார்க்காமலேயே தமது சமூகம் சார்ந்தவர்கட்கும் ஏனைய சமூகத்தவர்கட்கும் இலவசமாக வைத்தியசேவை வழங்கியவராவர்.
அத்துடன் ஆலய பணிகளில் குறிப்பாக கட்டுமான பணிகளில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார் ஆசீர்வாதம் கென்றி. அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்ததோடு சுன்னாகம் பட்டின சபையில் 3ஆம் வட்டாரத்தை மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். சமூகப்பணி தொடர்பில் ஆர்வம் கொண்டு பல நன்மை பயக்கும் செயல்திட்டங்களினூடே நமது சமூகத்திற்கு பணிபுரிந்திருக்கின்றார். இவர்கள் இருவரும் வாலிப காலத்தில் விளையாட்டு விழாவை ஒழுங்கமைத்து நடாத்தியவர்களில் முக்கியமானவர்கள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் எமது பங்கு கத்தோலிக்க மக்களுக்கும் எமது இந்துமத மக்களுக்கும் இடையிலான உறவை விளையாட்டு விழா எடுத்தியம்பி நிற்கின்றது. இவர்கள் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றியிருப்பதோடு விளையாட்டு விழாவிற்கு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில் அதிபராகவும் கோட்டக் கல்விப்பணிப்பாளராகவும் பதவி வகித்த ஐயம்பிள்ளை மனோகரன், திரு. தேவமிர்தசுந்தரம், திரு. கந்தப்பிள்ளை ஆனந்தராசா போன்ற வர்கள் முக்கியமானவர்கள் ஆவார்.
வண. பிதா யோசேப் இராயப்பு பங்குத் தந்தையாக இருந்த 1970களின் பிற்காலப் பகுதியில் இளைஞர் மன்றம் விளையாட்டுப் போட்டியை நடாத்துவதற்கான நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந் தாலும் விளையாட்டுப் போட்டி நிகழ்வன்று போட்டிகளை முன்னின்று நடத்துபவர்கள் தந்தையராகவே காணப்பட்டனர். வாலிப காலத்தில் விளையாட்டு போட்டியை ஒழுங்கமைத் தவர்கள் பின் உள்ள காலங்களில் தந்தையர் என்ற நிலையை அடைந்தும் போட்டி நடக்கும் தினத்தில் விளையாட்டுப் போட்டிகளை முன்நின்று நடாத்துவார்கள்.
இந்த வகையில் இறப்பியேல் பேரின்பநாயகம், யோசேப் வேதநாயகம், வெளிச்சோர் ஆபரணம் ஆகியோர் தொடர்ச்சியாக அவர்களது இறுதிக் காலம் வரை அந்தோனியார் ஆலய விளையாட்டு விழாவிற்கு தமது பங்களிப்பை வழங்கி நின்றார்கள். பிரதம மத்தியஸ்தர், விளையாட்டு ஆரம்பிப்பாளர், விளையாட்டு அமைப்பாளர் போன்ற பல்வேறு பதவிகளினூடே இவர்களின் பங்களிப்பு அமைந்திருந்தது. இதில் இ.பேரின்பநாயகம் அவர்கள் எம்மோடு இணைந்து விளை யாட்டுக்களை ஒழுங்கமைத்தல், புதிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தல், விளையாட்டு விதிகளை வடிவமைத்தல் போன்ற இன்னோரன்ன கடமைகளை ஆற்றியிருந்தார். மற்றும் யோ. வேதநாயகம் அவர்கள் அருட்பணி எட்மன் மைக்கல் பங்குத் தந்தையாக இருந்த காலத்தில் இளைஞர் மன்றத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேல் இயக்குநராக பணிபுரிந்திருந்தார். மேலும் 1986களில் அருட்பணி யோகராசா அடிகளார் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதி வரை வ.பெனடிக் அவர்கள் இயக்குநராக பணியாற்றியிருந்தார். மேற்குறிப்பிட்ட இருவரும் இளைஞர் மன்றத்தால் மேற்கொள்ளப்படும் விளையாட்டு விழாவிற்கு தம்மாலான பங்களிப்பை ஆற்றியிருந்தனர். இளைஞர் அமைப் பொன்றிற்கு வழிகாட்டியாக இருப்பதென்பது சவால் மிக்க பணியாகும். அப்பணியை மேற்குறிப்பிட்ட இருவரும் வழங்கியிருந்தமை பாராட்டிற்குரியதாகும்.
மேற்குறிப்பிட்டவர்கள் தவிர தொடர்ந்து வந்த காலங்களில் விளையாட்டு விழா நடைபெறும் தினத்தில் பொறுப்புக்களை ஏற்று இளைஞர் மன்றத்துடன் ஒத்துழைத்தவர்கள் வரிசையில் அ. அருட்பிரகாசம் ஆசிரியர், யோ.யேசுதாசன் ஆசிரியர், திரு. அ.யோசேப் ஆசிரியர், திரு.சி.சுகந்திரன் ஆசிரியர், சி.மத்தியூஸ், கு.பாக்கியநாதன், இ.தங்ககுலசிங்கம், சி.கியோமர் மரியதாஸ், அ.யேசுதாசன்.ம.சந்தியாப்பிள்ளை, ம தைரியநாதன் அ.இம்மானுவேல், சூ.அல்வினஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இளைஞர் மன்றத்தின் தலைமைப் பதவி வகித்து இன்று புலம்பெயர்ந்திருக்கின்ற ஜோ.சாள்ஸ் ஞானேஸ்வரன், அ.மரியரட்ணம், அ.கிருபைராசா, அ.தெய்வேந்திரராசா மற்றும் உறுப்பினர்களான ஆதர் யேசுதாசன், ஜே.மரிய பாக்கியநாதர். ஜே.மரியநாதன் மன்ற அங்கத்தவர்களாக இருந்த காலங்களில் விளையாட்டு விழா சிறப்புற உழைத்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர றொபேட் பிரான்சிஸ். ஜே. ரட்ணபோஸ். ஜே. யூட் மரியரட்ணம். ஜே. லூசியன் மரியதாசர். எ.அருட்பிரகாசம். சூ. யோசேப் ஞானரத்தினம். அ. வின்சென்ற், அ.அல்பிரட் மரியதாஸ், அ.செல்வராஜன், அ.பி.ராசகுமார். சூ.அலோசியதாசன் போன்றவர்கள் விளையாட்டு விழா சிறக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். 1980களில் இருந்து 1990கள் வரை இடம் பெற்ற விளையாட்டு விழாக்களுக்கான பரிசில்களை கொள்வனவு செய்தல். ஒழுங்கமைத்தல் என்பன தொடர்பான பணியை திரு. அ. செல்வறாயன் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.
1980களைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளில் இவ்விளையாட்டு விழாக்களுக்கு மத்தியஸ்தம் வகித்தல் போன்ற பணிகளில் எமது பங்கைச் சேர்ந்த ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி விளையாட்டுப் போட்டி தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அப்போது இருந்த மரியகொறற்றி மங்கையர் மன்றத்தினர் பங்காற்றியிருந்தனர். குறிப்பாக பதிவாளர் பணிகளை தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
1980களில் இருந்து விளையாட்டு விழா சிறப்படையும் வகையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல். அணிநடை, மன்றக் கொடி ஏற்றல் வைபவம் என்பன சிறப்பம்சங்களாக காணப்பட்டன. அது மட்டுமன்றி 1980களில் இருந்து இன்று வரை தொடர்ச்சியாக விளையாட்டு விழா சிறப்பு மலர் வெளியீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை உள்ள மற்றும் தடகள விளையாட்டுக்கள் எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது. மாணவர்களின் அறிவை மேம்படுத்தக்கூடிய வகையில் பொது அறிவுப் போட்டி, பொருள் பார்த்து எழுதுதல், சதுரங்கப் போட்டி. போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.
நத்தார். புதுவருடத்தை முன்னிட்டு வெளிமாவட்டங்களில் அரச தொழில், மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் எம் பங்கைச் சேர்ந்த மக்கள் இங்கு வருகை தந்து விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றிச் செல்வது முக்கியமான அம்சமாகும். அதுமட்டுமன்றி அயல் கிராமங்களில் இருக்கும் எமது உறவினர்களும் விளையாட்டு நிகழ்வு அன்று இன்கு வருகை தந்து தமது உறவினர்களுடன் நத்தார், புதுவருட கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதோடு விளையாட்டு நிகழ்வுகளை கண்டுகளிப்பர்.
மேலும் முன்னைய காலங்களில் விளையாட்டு விழா வருட முதல் ஞாயிறு மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுவது வழக்கமாகும். 1980ஆம் ஆண்டுகளில் காலை மாலை நிகழ்வுகளாக இடம்பெற்று வந்துள்ளது. 1995இற்குப் பிற்பட்ட காலங்களில் சனி மாலை நேரங்களில் உள்ளக விளையாட்டுக்கள் இடம்பெறுவதோடு ஞாயிறு தினங்களில் காலை மாலை என மைதான நிகழ்வுகள் இடம்பெறுவதை காணமுடிகின்றது.
மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில்குபற்றி வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு தரமான பரிசில்கள் வழங்கப்படுவது சிறப்பகாணப்படுவதுடன் தரம் 5 பலமைப்பரிசில்மீசை, பொ.த.சாதாரண தரப் பரீட்சை. பொ. த. உயர்தரப்பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் அவர்கள் கௌரவிக்கபடுவதும் வழக்கமாக காணப்படுகின்றது.
1995இடப்பெயர்வுக் காலம் வரை சுன்னாகம் புனித அந்தோனியார் இளைஞர் மன்றத்தின் தலைமையில் இடம் பெற்று வந்த விளையாட்டு விழா இடப்பெயர்வின் பின் இளைஞர்களுடன் இளம் பெண்களையும் உள்ளடக்கி அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகள் அவர்களால் இளையோர் மன்றம் என்ற பெயருடன் மீண்டும் 1998களில் இருந்து விளையாட்டு விழா ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இளையோர் மன்றத்தின் முதல் தலைவராக அ.யூட்சன் அன்ரனி அவர்களும் செயலாளராக அதிசயமலர் அவர்களும் பதவி வகித்தனர். தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் தலைவர் பதவியை வகித்தவர்கள் வரிசையில் செ. பிலிப் பிரேமதாசா, பா. யஸ்ரின் யூட், ஜோ. பிலிப் ஞானேஸ்வரன், அ. பிராங்அன்செலன், அ. கொன்சன்ரைன், என்பவர்கள் குறிப்பிடத்தக்கவராவர். தொடர்ந்து வந்த காலப்பகுதிகளிலும் இளைஞர் மன்ற தலமைத்துவங்கள் சோர்வின்றி 2017 ஆண்டு வரை இவ் விளையாட்டு விழாவை நடாத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இவ்விழா மேலும் மெருகூட்டப்பட்டு சரியான திட்டத்தினூடே முன்னெடுத்துச் செல்லப் படும் என்பதில் ஐயமில்லை. நூற்றாண்டைக் கடந்த இவ் விளையாட்டு விழா 125ஆவது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் என்பது நிறுதிட்டமான உண்மையாகும்.
ஆக்கம்: சூசைப்பிள்ளை இருதயநாதன் ஆசிரியர்