எம்மைபற்றி

1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்

ஒல்லாந்தர் இலங்கைக்கு காலடி எடுத்து வைக்கும் முன்னர் போத்துக்கேயர் இலங்கையை ஆண்டகாலத்தின் இறுதி வருடங்களில் யாழ் குடாநாட்டின் கரையோரப் பிரதேசங்களில் பிரான்சிஸ்கன் சபைக் குழுக்களும் யாழ். குடாநாட்டின் நடுப்பகுதியில் யேசு சபைக் குருக்களும் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்தனர். குடாநாட்டின் வலிகாமத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு பிரதேசங்களின் சில இடங்கள் இவர்களின் ஆன்மீக நெறிப்படுத்தல் மையங்களாக விளங்கியுள்ளன்.

அன்றைய யாழ்ப்பாணப் பட்டினத்துள் உள்ளடங்கிய சுன்னாகம் என்ற கிராமத்திலிருந்து 49 வயதுடைய மாக்கோஸ் தாண்டவா என்ற கத்தோலிக்க கிறிஸ்தவர் 1645ஆம் ஆண்டு யூலை 18ம் திகதியில் போத்துக்கேய அதிகாரி கப்டன் பிரான்சிஸ்கோ டி சொய்சாஸ் டி கப்ரொய்ரா என்பவர் தனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணை நடாத்திய போது வேதாகம நூலில் ஆணையிட்டு சாட்சியம் அளித்ததாக வரலாற்றுத் தகவல்கள் ஒன்றுள்ளது. அன்றைய காலப்பகுதியில் வலிகாமத்தின் ஏனைய சில பகுதிகளில் காணப்பட்டது போன்று சுன்னாகப் பங்கிலும் அதன் பங்குத்தந்தை மக்களிடமிருந்து அளவுக்கு அதிகமான வரி அறவிட்டதாகவும் ஆலயத்தில் சொந்தமான காணிகளில் மக்களை கட்டாய வேலைக்கு அமர்த்தியதாகவும் மக்களிடமிருந்து பணம் பொருள் வடிவில் நன்கொடைகள் வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டதாகவும் இதை மீறுவோருக்கு உடல் உபாதைகளுடன் கட்டாய வேலைக்குப் பணிக்கப்பட்டதாகவும் இவர் சாட்சியமளித்ததாக இவ்வரலாற்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று 1645ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற மேலும் ஒரு விசாரணையில் டொம் பார்த்த சால் சந்தண மாப்பணர் என்ற சுன்னாகம் கிராமத்திலுள்ள ஊர்ப் பெரியவர் ஒருவர் சாட்சியம் அளிக்கையில் மேலே குறிப்பிட்டது போன்ற குற்றச்சாட்டை தனது “The catholic church in Sri Lanka – The Portuques Period-Volume” இன் 2ஆம் பதிப்பு பக்கங்கள் முறையே 367, 370, 404இல் அதன் ஆசிரியரான அருட்தந்தை V.Perniola S.J. அடிகளாரால் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அத்தகையதொரு சாட்சியத்தை வழங்கக்கூடிய கல்வியறிவு கொண்டதும் ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட உறுதியான கத்தோலிக்க சமூகம் ஒன்று இருந்துள்ளது என்பதும் வெளிப்படையாகின்றது என்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புடைய தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளமையும் அக்காலத்தில் இருந்த கத்தோலிக்க சமூக நிறுவனக் கட்டமைப்பின் வலிமையையும் எடுத்துக்காட்டுகின்றது. போத்துக்கீசருக்குப் பின்வந்த ஒல்லாந்தர் கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டமையினால் கத்தோலிக்க தேவாலயங்கள் பல அழிவுக்குள்ளானது. இக் காலப்பகுதியில் கத்தோலிக்ககாசிகள் மறைந்து வாழ வேண்டிய தேவை ஏற்பட்டது. இச்சூழ்நிலை 175 ஆண்டுகளாக நீடித்தது. ஆயினும் விசுவாசத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தமையினால் ஒல்லாந்தர் அதிகாரிகள் சமய சகிப்பு நிலைக்குத் தங்கள் மனோநிலைகளை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு வருகின்ற வேளையில் விசுவாசக் செயற்பாடுகளை ஒரளவு சகித்துக் கொண்ட காலப்பகுதியில் முத்திப்பேறுபெற்ற யோசேப்வாஸ் அடிகளாரின் (Oratorians ஒறரோறியனஸ் சபைக் குருக்கள் ஆன்மீகப் பணிகளுக்கு உயிரோட்டம் வழங்கினார். அதாவது விசுவாசத் தீயை ஒல்லாந்தரால் அணைக்க முடியவில்லை.

பழைய ஆலயத்தின் கட்டிட வேலைகள் 1842ல் ஆரம்பிக்கப் பட்டுள்ளன என மக்களிடையே நிலவிய நாலடி செய்யுள் பாரம்பரியம் கூறுவதாக நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் OMI XXV Years Catholic Progress 25 வருட கத்தோலிக்க வளர்ச்சி என்ற நூ லில் குறிப்பிட்டுள்ளார். அந்நூல் கூறும் தகவலின்படி அவ்வாலயம் வேலு அந்தோனி (கண்ணனி) என்பவரால் எழுப்பப்பட்டது. 1837இல் சில கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரானவர்களால் இவ்வாலயம் தீயிடப்பட்டபோது முழு ஆலயமும் எரிந்து சாம்பலான போதும் புனித அந்தோனியாரின் திருச் சொருபம் கூட்டுடன் அதிசயிக்கத்தக்க வகையில் அழிவிலிருந்து தப்பியது. இந்நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் அந்தோனி மரியான் தலைமையில் மேலதிக மாகப் பெற்றெடுத்த காணியில் நீக்கிலான் பிரான்சிஸ்ஸின் மருமகனும் வேலு அந்தோனியும் வேறு ஒரு ஆலயத்திற்கு 1842இல் அடிகோலினர்.

பின்னர் பங்குக்குரு அருட்தந்தை ஜென் அடிகள் OMI 1902 – 1906 புதிய குருமனை வேலைகளைத் தொடக்கி இவ்வாலய பழைய பீட சிம்மாசன வேலைகளையும் புனரமைப்புச் செய்தார். ஆலயம் தீயினால் அழிக்கப்பட்ட போது அதிகமாகத் தப்பிய புனித அந்தோனியார் திருச்சொருபம் சந்தன மரத்தினால் ஆனது என வாய்மொழியாகச் சொல்லப்படுவதாலும் அது வடிவமைக்கப்பட்ட விதத்தைக் கொண்டும் அது போத்துக்கீச கால சொரூபம் என நம்பப் படுகின்றது.

1830களில் காணிக்கை மாதாவின் பெருநாட்கள் மிக விமரிசையாக சுன்னாகம் ஆலயத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. அக்கால கட்டங்களில் சில்லாலை, மாதகல் போன்ற பகுதிகளில் இருந்து மாட்டு வண்டில்களில் வந்து மாதாவின் பக்தர்கள் கூடாரமிட்டு விழாவில் பங்குபற்றிச் சென்றதாக வாய்மொழிப் பாரம்பரியச் செய்திகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. பின்னர ஒரு காலகட்டத்தில் அதாவது 1900களின் முற்பகுதிகளில் இங்கு நடாத்தப்பட்ட நற்கருணை வழிபாடுகளும் சிறப்பம்சம் வாய்ந்தன. முழுக்கிராமத்தையும் விழாக் கோலமாக்கி பல விசேட மேடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு நற்கருணைப் பவனியும் வழிபாடும் இடம்பெற்றன.

ஆலயத்தில் புனித அந்தோனியார் திருப்பண்டம். சிம்மாசனம், கல்லறை ஆண்டவர் திருச்சொரூபம், தந்தத்தினாலான பாலன், கல்லறை ஆண்டவர் கூடு, கொடிமரம். காண்டாமணி, நற்கருணைப் பாத்திரம் என்பன பல பத்தாண்டுகளுக்கு முற்பட்டதாகும். பழைய திருச்சிலுவை மரமானது 1995இல் யுத்தகால இடப்பெயர்வின் போது அழிவுக்குள்ளாகியதால் பின்னர் 2008ஆம் ஆண்டில் பங்குக்குரு அருட்தந்தை ம.ஹான்ஸ்போவர் அடிகளார் காலத்தில் புதிய திருச்சிலுவை மரமானது 25 அடி உயரத்திற்கு பலா மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. இதே போல 1995இல் யுத்தகால இடப்பெயர்வின்போது புனித அந்தோனியாருடைய திருப்பண்டமானது இடம்மாறியுள்ளது. இதைத் தேடி எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று வரை எமது பாரம்பரியத்தில் இருக்கும் வருடாந்த விளையாட்டு விழாவானது 1900ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து தொடர்ந்து வருகின்றது என்றும் அது பங்குக்குரு அருட்தந்தை ஸ்கூர்மன் அடிகளாருடைய காலத்திற்குரியது என்றும் வாய்மொழித் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதுள்ள புதிய ஆலயத்தின் பீடகோபுரத்திற்கான அடிக்கல் 1936இல் கட்டப்பட்டது. 1842இல் அமைக்கப்பட்ட ஆலயத்தின் திருபீடமானது வடக்கு திசையை நோக்கி அமைந்திருந்தது. 1936இல் திருப்பீட அடிக்கல்லானது தெற்கு திசையை நோக்கிய கோவிலுக்கான அடிக்கல்லாக நாட்டப்பட்டு பெரிய வில் அமைப்பிலான பீடக்கோபுரம் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டு வந்தது. இது பழைய ஆலயத்தின் முகப்பில் அமைக்கப்பட்டு இருந்தது.

1972ஆம் ஆண்டளவில் பங்குக்குருவாக இருந்து அருட்தந்தை இராயப்பு ஜோசேப் அடிகளார் (தற்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர்) அவர்கள் பழைய ஆலயத்தை முற்றாக இடித்து புதிய ஆலயம் ஒன்றைக் கட்டி 1974.11.10இல் அது யாழ் ஆயரால் அபிசேகம் செய்யப்பட்டது. அதன் போர்ட்டிக்கோ மண்டப வேலைகள் பங்குக்குரு அருட்தந்தை எட்மன் மைக்கல் அடிகளார் காலத்தில் தொடங்கப்பட்டது. பங்குக்குரு அ.ஞானப்பிரகாசம் அவர்களின் காலத்தில் யுத்தத்தால் அழிவடைந்த மிகப்பழம்பெரும் குருமனைக்குப் பதிலாக புதுகுருமனை அமைக்கப்பட்டுள்ளது. பங்குக்குரு அருட்தந்தை பா.பி.ராஜசிங்கம் அடிகளார் காலத்தில் யுத்தத்தால் சிதைவடைந்த ஆலய விறாந்தையானது மீளப்புனரமைத்துக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

1942இல் அமைக்கப்பட்டதிருப்பீடமானது வடக்கு நோக்கி இருந்தமைக்கான காரணம் தற்போது புனித அந்தோனியார் வீதியானது பிரதான வீதியாக இருந்தமையே ஆகும். டாக்டர் சுப்பிரமணியம் விதிகந்தரோடை வீதி என்பது 1900 ஆண்டுகளின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட வீதியாகும். தனியார் காணிகளை ஊடறுத்து இப்பாதை அமைக்கப்பட்டமையினால் காணிகளின் உரிமையாளர்களுக்கு இப்போதும் வீதிகளின் இரு மருங்கிலும் காணிகளின் உரிமை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அருட்தந்தை ஜோசேப் ஜெயசீலன் அடிகளாரால் 2005.04.29 புதிய மணிக்கூட்டுக் கோபுரத்திற் கான அடிக்கல் நடப்பட்டது. அக் கோபுரமானது 50 அடி உயரத்தினைக் கொண்டு ஆலயத்தின் இரு புறமும் உயர்ந்து அழகுற எழுந்து நிற்கின்றது. இது 175 ஆவது ஆண்டாகிய இவ்வருடம் தற்போதைய பங்குத் தந்தை ஜே.பி. யோதிநாதன் அடிகளாரின் அழைப்பின் பேரில் யாழ்.ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் 13.06.2017இல் புனித அந்தோனியார் பெருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசம் அடிகளாரின் எழுச்சிக் காலத்தில் அவருடைய நண்பரான சுன்னாகத்தைச் சேர்ந்த சூசைப்பிள்ளை எவரெஸ்ட் என்பவருக்கு கத்தோலிக்க பத்திரிகையாகிய -இராக்கினி தூதன்” என்ற பத்திரிகையில் இளைஞர்களுக்காக பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது என்பதை அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளாரின் குறிப்பிலிருந்து கிடைக்கப்பெறுகின்றது. இக்காலகட்டங்களில் இருந்து இந்துநேசன் என்ற இந்து சமயம் சார்ந்த பத்திரிகை ஒன்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த இந்துசமய ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் வெளியிடப்பட்டது. இவ்விரு பத்திரிகைகளுக்குமிடையே வாதப்பிரதிவாத வடிவில் போட்டியான ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. 1912.02.02இல் சூசைப்பிள்ளை எவரெஸ்ட்டின் திருமணச் சடங்கை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசம் அடிகளார் தானே முன்னின்று நடத்தியதாக தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சுவாமி ஞானப்பிரகாசம் அடிகளாரின் மனந்திரும்புதல் இயக்கத்தில் கல்விமான்களுக்குரிய பகுதி இல்லற புத்திஜீவிகளில் முக்கியமானவரான எவரெஸ்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இவர் யேசு சபைக் குருக்களால் தெல்லிப்பளையில் நடத்தப்பட்ட Jesuit College இல் கல்வி கற்றிருக்கலாம் எனவும் நம்பப்படு கின்றது. இவரும் இவரது பரம்பரையினரும் வாழ்ந்த பழம்பெரும் கல்வீடுகளும் மேலமாடி வீடுகளும் வீட்டு நுழைவாயில் அமைப்புக்களும் அதன் எச்சங்களும் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

சுன்னாகத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு இன்றும் திருகோணமலையிலும் வணிகத் தொடர்புகள் மற்றும் வணிக மையங்கள் பேணப்பட்டு வருகின்றன. போத்துக்கீசருடைய காலப்பகுதியில் அவர்களுடைய வணிகப் பிரிவுகளில் இவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. அதனாலேயே புனித அந்தோனியாருடைய சொரூபம் சந்தன மரத்தினால் செய்யக்கூடிய வகையில் இந்திய, சிங்கப்பூர் கடல் வணிகத் தொடர்புகள் இருந்திருக்கலாம் என மூத்த குருக்களின் வாய்மொழி மூலம் உய்த்துணர முடிகின்றது. அதற்குச் சான்றாக இன்றும் வணிக முறையில் குறியீட்டு மொழிகள் வழக்கில் உள்ளன. ஆலயத்தின் அருகிலுள்ள மண்டபமானது 1900ஆம் ஆண்டின் நெசவுத் தொழிலுக்கான மையமாக இருந்துள்ளது. United Trading Company என்ற பெயரில் தொழிற்சாலையாக இருந்துள்ளது.

இங்கு

1 பஞ்சிலிருந்து நூல் நூற்றல்

2. கை இராட்டினம் கொண்டு நூல் திரித்தல்

3. பசை போடுதல்

4. குழலில் பா ஓடுதல்

5. குஞ்சம் கட்டுதல்

6. சாயம் போடுதல்

7. உடுபுடவைகள் கைத்தெறி நெசவு செய்தல்

போன்றன மேற்கொள்ளப்பட்டன. ஆலயத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர் இங்கு தொழில் புரிந் துள்ளனர். அவர்களது வாழ்வாதாரமாகவும் இது இருந்துள்ளது. நெசவுத் தொழிலின் திறமையைப் பாராட்டி சான்றிதழ்களை மகாத்மா காந்தி இலங்கை வந்த போது இங்குள்ள தொழிற்சாலை உற்பத்தி யாளர்களுக்கும் வழங்கியுள்ளார் என்பதும் அறியக்கிடக்கின்றன.

இச்சமூகமானது வைத்தியப் பாரம்பரிய முறைகளையும் சுதேச சித்தாயுள்வேத மிருக வைத்திய முறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆகவே இங்குள்ள நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்ட சுன்னாகம் றோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் என்பது செழிப்பானதும் விசுவாசத்தில் பற்றியெரியும் ஒளியாகவும். விசுவாசபாரம் பரியங்களைக் கொண்டதுமான தொன்மை வாய்ந்ததொன்றாகும்.

குறிப்பு : இவ் ஆலயத்தின் தூய அந்தோனியார் திருச்சொரூபமானது எக்காலகட்டத்திற்கு உரியதென்பதை ஆய்வு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கொண்டு வருகின்றார்.

திருஞானம் ஞானசீலன் (கணக்காளர், யா.மா.கூ.ச)

Scroll to Top