பணிக்காலம்-1986
அருட்தந்தை அமரர் ஞா.எட்மன் மைக்கல் அடிகளார் எமது பங்கில் பங்குத்தந்தையாக இருந்து கடமையாற்றிப் பின்பு மாற்றலாகிச் செல்ல எம் பங்கிற்கு புதியவராக வந்த குருவானவர் தான் அருட்பணி.ம.அல்பேட் யோகராஜா அடிகள். இவர் மிக ஆழமான இறையியல் புலமை கொண்டவராகவும் தன் மறையுறையினூடாக இறை மக்களின் மனங்களில் மிக ஆழமான இறை விசுவாசத்தை விதைத்தவராகவும் அன்றைய காலங்களில் விளங்கினார். அருட்பணி ஞா.எட்மன் மைக்கல் அடிகள் மேல் எம் பங்கு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை, விசுவாசம், அவருடைய பிரியாவிடை நிகழ்வுகளில் இந்துமதச் சகோதரர்கள், கிறிஸ்தவ மக்கள் இணைந்து சிறப்பித்தவைகளை யெல்லாம் அவர் நன்கு அறிந்திருக்கின்றார்.
அருட்தந்தை ம.அல்பேட் யோகராஜா அடிகளாருடைய பணிக்காலம் ஒரு இக்கட்டான காலகட்டமாக அன்றைய காலம் இருந்தது. அவருடைய காலத்தில் எம்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, அவர் தன்னுடைய ஆன்மீகப் பணிகளினூடே சமூகப் பணிகளையும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.
இடப்பெயர்வுக் காலம்:-
அவருடைய காலத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து எம் ஆலயம் நோக்கி வந்து தஞ்சமடைந்தனர். காங்கேசன்துறை, மயிலிட்டி, ஊறணி, பலாலி, கட்டுவன், தெல்லிப்பளை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்தனர். எமது ஆலயத்திற்கு மேற்கு பக்காமாகவுள்ள மண்டபத்தில் அவர்களை தங்கவைத்தோம். அவருடைய காலத்தில் இளைஞர்களாக இருந்த இன்றைய தந்தையர் மன்றத்தினரே அவர்களை நன்கு கவனித்தனர். அவர்களுக்கு உடுக்க உடுப்பும், உண்பதற்கு உணவும், மருத்துவ வசதிகளையும் செய்து வந்தோம். முதலில் சமைத்த உணவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களே சமைத்து சாப்பிட உதவிகள் செய்தோம்.
அந்த மண்டபம் அருட்பணி அமரர் ஞா.எட்மன் மைக்கல் காலத்தில் சிறியனவான புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன. மேற்குப்பக்கமாகச் சுவர் கட்டப்பட்டு, சுவரின் மேற்குபகுதியில் கறுப்புப் பெயின்றினால் நிறந்தீட்டப்பட்டு, அங்கே பகலும் இரவிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது.
அருகே ஒரு சிறிய மேடையும் அமைக்கப்பட்டு அதிலே கலைநிகழ்ச்சிகள், ஒளிவிழாக்கள் என்பன நடைபெற்றன. அருட்தந்தை ம.அல்பேட் யோகராஜா அடிகளார் காலத்தில் அம்மண்டபம் மேலும் புனரமைப்புச் செய்யப்பட்டது. அதிலே கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், என்பன நடைபெற்றன. அருட்பணி யு.து.ஏ சந்திரகாந்தன், அருட்பணி ஜிவேந்திராபோல், எழுத்தாளர் நாவண்ணன் போன்றவர்களினால் கருத்துரைகளும் நடைபெற்றன. அன்று மண்டபம் முன்பு ஒரு காலத்தில் மலிவு விற்பனையும் இடம்பெற்றது. அமரர் அந்தோனிப்பிள்ளை அமிர்தநாதன் தலைமையில் ஷஷஅறிவகம்|| என்றொரு வாசிகசாலையும் இயங்கியது. அது எமது பழைய குருமனையின் தெற்குப் பக்கமாக விறாந்தையில் இயங்கியது. பின் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு பல பத்திரிகைகளும் போடப்பட்டன. அருட்பணி அமரர்.ஞா.எட்மன் மைக்கல் அடிகளின் காலத்தில் அவரின் முயற்சியால் எம் பங்கில் ஒரு முதலுதவிப் படையை உருவாக்கினார். முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எம் பங்கைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், அயல் கிராமத்திலுள்ள இளைஞர் யுவதிகள், இதில் இணைந்து பயிற்சியும் பட்டமும் பெற்றனர்.
அமைதிப்படைக் காலம்:-
1987ம் ஆண்டு ஜீன் மாதம் புனித அந்தோனியாரின் நவநாட்கள் நடந்து கொண்டிருந்த காலம் இந்தியா உணவுப்பொதிகளை விமானத்திலிருந்து ஷஷபரசூட்|| மூலமாகக் கீழே போட்டது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் எங்கும் போடப்பட்டது. அதற்குப் பிற்பாடு யுத்த நிறுத்தம் ஏற்பட்டு இலங்கை – இந்தியா ஒப்பந்தம் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்கள் தத்தம் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை எற்பட்டது.
பின்பு இந்தியா அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் சில வருடங்கள் இருந்தபின் மீண்டும் யுத்தம் மூண்டது. மக்கள் சொல்லமுடியாத பல துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தனர். தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. சுன்னாகத்தை அண்டியபகுதிகளிலும் n~ல்கள் விழந்து வெடித்தன. அங்கே காயப்பட்டவர்களையெல்லாம் எமது ஆலயத்துக்கு கொண்டு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் சகல மருத்துவ உதவிகளைச் செய்து பின்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்போம். அந்த ஆலயச் சூழலே ஒரு வைத்தியசாலையாக காட்சியளித்தது.
இப்படியாக இரவுபகலென்று பாராமல் எம்மக்களுக்கான பல உதவிகளைச் செய்தோம். அருட்பணி ம.அல்பேட் யோகராஜா அடிகளார் வெள்ளைக் கொடியுடன் சுன்னாகம் சந்தியில் நிற்கும் இராணுவ அதிகாரிகளிடம் எம்மக்களின் தேவைகளை அறிவிப்பார். ஊடரங்குச் சட்டம் எமது பகுதியில் நீக்கப்பட்டால் அருட்தந்தையிடம் அறிவிப்பார்கள். அதன்பின்பு ஆலயமணி அடிக்கப்படும். மக்கள் நடமாடுவார்கள். சுன்னாகம் சந்தைப் பகுதியும் திறக்கப்பட்டு மக்கள் தத்தம் பொருட்களை விற்கவும் வியாபாரம் செய்ய கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கினார். இது உலகறிந்த உண்மையாகும்.
எமது ஆலய குருமனையின் ஒரு பகுதியை சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் தங்களின் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்த அந்த இடத்தை கொடுத்து உதவினோம். யூனியன் தலைவர் அமரர் குமாரவேல் மற்றும் பெரியவர்கள் மக்களுக்கான உணவுப் பொருட்களைப் பங்கீட்டு அடிப்படையில் கொடுக்க உதவினோம். இப்படியாகப் பலவிதமான உதவிகளை எம் பங்குத்தந்தையுடன் இணைந்து செயற்பட்டோம்.
அருட்தந்தையாருடைய காலத்தில் எமது ஆலயத்தின் திருவிழாத் திருச்சொரூப, நற்கருணை பவணிக்கென ஒரு ஜீப்வண்டி ஒன்றை கொண்டுவந்தார். அந்த வண்டி மூலம் திருச்சொரூப பவணிகளை நடாத்தினோம். அந்த வண்டி எமது ஆலயத்திற்குச் சொந்தமானது. எமது ஆலயம் மாத்திரமல்ல மல்லாகம் மாதா கோவில், மல்லாகம் சதாசகாய மாதாகோவில், குளமங்கால் சவேரியார் கோவில் திருவிழாக்களுக்கும் ஆலய வண்டியை எடுத்துச் சொல்வோம். அவ்வண்டி தற்போது குளமங்கால் பங்கிற்கு உரியதாக மாற்றப்பட்டுவிட்டதாக முன்னாள் பங்குத் தந்தை அருட்பணி பாஸ்கரன் அடிகளார் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் திருவிழாக்காலங்களில் அவ்வண்டியை பயன்படுத்த அருட்தந்தையர்கள் உதவிபுரிகின்றனர்.
இசைக்குழு:-
அருட்தந்தையுடைய காலத்தில் இயேசு புகழ் பாடிகள் என்னும் ஒரு இசைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அக்குழுவின் நோக்கம் அன்றைய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக எம் இளைஞர்களை இறைவழியில் வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கோடும் ஒரு ஆற்றுப்படுத்தும் செயற்திட்டத்திலுமாகவும் உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ இளைஞர்கள் மாத்திரமல்லாது இந்து இளைஞர்களும் இதில் பங்குபற்றினர். கரோல் கிறிஸ்தவ நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தனர். உயிர்த்த ஞாயிறன்று ஷஷஉயிர்ப்பின் கானங்கள்|| எனும் பக்திப் இசைப்பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.
மரியாயின்சேனை மன்றத்தின் தலைவராக தற்போது இருக்கும் திரு.யே.ரட்ணபோஸ் என்பவர் தான் அன்றைய ஷஷஇயேசு புகழ் பாடிகள்|| என்ற இசைக்குழுவின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. அருட்தந்தை யோகராஜா அடிகளார் காலத்திற்கு முன்பும் எம் பங்கில் ஒரு இசைக்குழு இருந்தது. அக்குழுவின் பெயர் சைனிங் ஸ்ரார் இசைக்குழுவினர். அதன் ஸ்தாபகர் திரு எவரெஸ்ட் அருட்பிரகாசம் ஆவார். அக்குழுவின் பாடகர்களாக அன்றைய காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் பங்குபற்றினார்கள். அத்துடன் சுண்டிக்குளி புனித யுவானியார் ஆலயத்தைச் சேர்ந்த திரு.அன்ரன் டேவிற் என்பவரும் இணைந்திருந்தார். அருட்தந்தையின் காலத்தில் திரு.சூ.ஜெனோசியஸ்., திரு.ம.யோண்பற்றிக் இணைந்து ஒரு நாடகத்தை மேடையேற்றினார்கள். ஷஷஅயலன் யார்?|| என்கின்ற வேதாகமத்தில் வரும் நல்ல சமாரியன் என்ற உவமையில் வரும் காட்சியை வைத்து மேடையேற்றினார்கள். அந்த நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த நாடகம் பின்பு மல்லாகம் புதுமை
மாதா ஆலயத்திலும் மேடையேற்றப் பெற்றது. இந்நாடகத்தில் திரு.ச.செபரட்ணம், திரு.சூ.யோசேப் ஞானரட்ணம், அமரர் பொ.ஜெயராசா, திரு.ப.அன்ரன்மரியாதாஸ், திரு.தை.யஸ்ரின் யசோதரன், அமரர் அன்ரனிப்பிள்ளை (பிரான்ஸ்) திரு.தா.அன்ரன்குமார் (பிரான்ஸ்) ஆகியோர் நடித்தனர். இந்த நாடகம், சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் மேடையேற்றினார்கள்.
அருட்தந்தை செபஸ்ரியன் அடிகளாரின் காலத்தில் யாழ். மறைமாவடத்தில் புதுப்பித்தல் ஆண்டு பிரகடணப்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஆண்டில் கலை கலாச்சாரப் பிரிவு என்று ஒரு பகுதி இருந்தது. அப்பகுதிக்குப் பொறுப்பாக திருமதி.செபஸ்ரியன் டெனிஸ் அக்னெஸ் ஞானேஸ்வரி (பிரான்ஸ்) பொறுப்பேற்றிருந்தார்.
அன்றைய காலத்தில் ஒளிவிழா நிகழ்வுகளை இந்தக் கலை கலாச்சாரப் பிரிவினர்தான் நடாத்தினார்கள். அந்த நிகழ்வில் ஷஷமீட்பர் பிறந்துள்ளார்|| என்னும் நாடகத்தை திரு.ம.யோன்பற்றிக், திரு.வின்சென்ட் அன்ரன் மரியதாஸ் (கனடா) என்பவர்கள் இணைந்து மேடையேற்றினார்கள். அந்த நாடகத்தை எம் பங்கைச் சேர்ந்த அனைத்து ஆலயங்களின் இளைஞர் யுவதிகள் இணைந்து நடித்தனர். அத்துடன் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளையும் நல்ல முறையில் செயற்படுத்தினார்கள். பாராட்டும் பெற்றனர்.
முடிவுரை:-
இன்றைய தந்தையார்களாக இருக்கின்றவர்கள் அன்றைய அசாதாரண சூழ்நிலையிலும் பல நல்ல செயற்பாடுகளைச் செய்து சாதனைகள் படைத்துள்ளனர். எமது ஆலயத்தின் அனைத்து வேலைகளிலும் அவர்களின் கைவண்ணம் மெச்சத்தக்கதாக உள்ளது. இருப்பினும் இன்னுமொரு விடயம் என்னவெனில் எமது ஆலய மண்டபம் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். மூன்று மாடிக் கட்டமாக அமைக்கப்பட வேண்டும். அங்கே ஒரு பகுதியில் பாலர் பாடசாலையாகவும், களஞ்சியமாகவும், மேற்பகுதிகள், கருத்தரங்கு, பட்டிமன்றம், மறைக்கல்வி போட்டிகள் நடத்தவும் மற்றும் வாசிகசாலையாகவும் ஏனைய நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தக்கூடியதாக கட்டப்பட வேண்டும் என்பதுவே எம் விருப்பமாகும்.
தொகுப்பு :- எம். யோண்பற்றிக்
