தூய அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு

தூய அந்தோனியார் போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் என்னும் ஊரில் 1195ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் பெர்தினாந்து) பெர்டினான் (Ferdinand) இவரது தந்தை மார்ட்டின் டீ புல்லோன்ஸ் ஆவார். (Martin De Bullones) இவரது பெற்றோர் இவரை ஒரு கத்தோலிக்க பாடசாலையில் சேர்த்தனர். இவருடைய பாடசாலைப் பருவ காலத்தில் இவரை நன்கு அறிந்த ஆசிரியர்கள் “இவர் ஒரு வீரனாக வருவார்” என்று கூறி வந்தனர். ஆனால் இவருடைய தந்தை இவர் ஒரு “நல்ல நீதிமானாக வரவேண்டும்” என்றே விரும்பினார். இவ்வாறாக இருவரும் இவர் எப்படி வரவேண்டும் என்று தீர்மானிக்க அந்தோனியார் 1210ஆம் ஆண்டு அதாவது அவருடைய 15ஆவது வயதில் அகுஸ்தீனார் சபையில் சேர்ந்தார்.

இக்காலகட்டத்தில் குருமடத்தில் இவர் இருப்பதை அறிந்த இவரது நண்பர்கள் தினந்தோறும் இவரை சந்திப்பதற்காக வருவார்கள். துறவற வாழ்விற்கு இது மிகவும் இடையூறானதும் பொருத்தமற்றதும் என்பதை உணர்ந்த அந்தோனியார். தன்னை Goimbra நகரில் உள்ள ஹோலி குறொஸ் (Holy Cross) என்ற மடத்திற்கு மாற்றம் கேட்டுச் சென்றார்.

குருமட வாழ்வில் எட்டு வருடங்களினைப் பூர்த்தி செய்த அந்தோனியார் 1219இல் அதாவது தனது இருபத்து நான்கு (24) வயதினில் குருப்பட்டம் பெற்றார். இக்காலத்தில் அந்தோனியாருடைய அகுஸ்தீனார் குருமடத்தில் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த சில துறவிகளைக் கண்டார். பிரான்சிஸ்கன் சபையினரின் பணியையும் வாழ்வினையும் பிரான்சிஸ்கன் சபையினரின் நாடுகாண் பயணங்களையும், இயேசுக் கிறிஸ்துவின் போதனைகளை வாழ்வாலும் வார்த்தைகளாலும் வாழ்ந்தும் போதிக்கும் நிலையை அறிந்த அந்தோனியார் தானும் அவர்களுடன் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து வேதசாட்சியாக மரணிக்க வேண்டும் என்று ஆசை கொண்டார்.

இதன் பயனாக 1220ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து கொண்டார். இக்காலத் திலேயே தான் இவர் தனது பெயரை “அந்தோனியார்” என்று மாற்றிக் கொண்டார். இக்காலத்தில் பிரான்சிஸ்கன் சபைக் குருக்களுடன் Morroco செல்வதற்கு அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஆனால் இவர் Morroco செல்வதை இறைவன் விரும்பவில்லை போலும். ஏனெனில் இவர் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட மாலுமிகள் கப்பலை மீண்டும் போத்துக்கல் நாட்டில் Sicily நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

அந்தோனியார் Messina நகரில் இருக்கும் போது 1221ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி Assisi நகரில் தூய பிரான்சிஸ் அசிசியாரின் தலைமையில் பிரான்சிஸ்கன் சபையின் துறவிகளின் மாநாடு நடைபெற்றது. இதன்போது ஐரோப்பாவின் பிரான்சிஸ்கன் சபையினைச் சேர்ந்த துறவிகள் அனைவரும் ஒன்றுகூடி ஜெபத்திலும் அசிசியின் போதனையிலும் மூழ்கி இருந்தனர்.இம்மா நாட்டின் இறுதியிலே அந்தோனியாரும் Monte Paolo என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு இவர் பணியாற்றிய காலத்தில் குருப்பட்டம் வழங்கும் திருச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் மறையுரையாற்ற (பிரசங்கம்) இருந்த குருவிற்கு திடீரென ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்குப் பதில் வேறொருவர் மறையுரையாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனை நிறைவு செய்ய எந்த ஒரு குருவானவரும் முன்வரவில்லை. இதனால் மடத்தின் தலைவர் அந்தோனியாரை அழைத்து “நீர் ஏதாவது உமது மனதில் தோன்றுவதைக் கொண்டு மறை யுரையாற்றும்” என்று குறிப்பிட்டு மறையுரைக்கு அனுப்பினார். அந்த மக்கள் கூட்டம் நிறைந்த திருப்பலிச் சடங்கில் ஆற்றிய பிரசங்கம் அசிசியார் குருமட மாணவர்களுக்கும் இத்தாலி முழுவதற்கும் இறையியல் போதிக்க வழிகோலியது. இந்த வகையில் இத்தாலி மட்டும் அல்ல பிரான்ஸ் தேசம் முழுவதும் சென்று பிரசங்கம் செய்து வந்தார்.

இக்காலத்தில் ஏற்பட்ட பாவச் செயல்களைக் கண்டு வெறுத்தது மட்டுமல்லாது பெரியவர் களானாலும் அவரவர் குற்றங்களை அவர்களுக்கே வெளிப்படையாகக் கூறும் மனோதைரியம் கொண்டவர். இக்காலத்தில் திருசாபைக்கும் இறையியலுக்கும் எதிராக எழுந்த பேதகங்களை தனது நாவன்மையால் அடக்கினார். இதனால் “தப்பறைகளின் சம்மட்டி” என்று அழைக்கப் பெற்றார். தனது 28ஆவது வயதில் அதாவது 1223ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவிகளுக்கு என்று ஒரு இறையியல் கல்லூரியை நிறுவினார். தூய பிரான்சிஸ் அசிசியார் இறந்த பின் அம்மடத்தின் தலைமைப் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டது. சிறுகாலத்தில் அப்பதவியினையும் துறந்து போதனை வாழ்வில் இறங்கினார். 1230ஆம் ஆண்டு பாப்பரசராசு இருந்த 9ம் கிறகோரி (Gregory 9) முன் பிரசங்கம் செய்யும் வாய்ப்பு அந்தோனியாருக்குக் கிடைத்தது. அவரின் போதனையில் திழைத்த பாப்பரசர் அந்தோனியாருக்கு “வாக்குத்தத்தத்தின் பெட்டகம்” என்ற பெயரை வழங்கினார். அவ்வாறு தவக்காலங்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தினந்தோறும் ஊர் ஊராகச் சென்று போதித்து வந்தார்.

இக்காலப்பகுதியில் அந்தோனியார் தனிமையில் இரவு வேளையில் இறைவனின் பிரசன்னத் துடன் இருப்பது வழமை. இவ்வாறு ஒருநாள் தனது நண்பனின் வீட்டில் இருந்து ஜெபித்துக் கொண்டு இருக்கும் போது வழமையிலும் பார்க்க அறை பிரகாசமாக இருந்தது. இதனை கதவின் துவாரத்தினூடாகப் பார்த்த நண்பன் அவர் குழந்தை இயேசுவுடன் விளையாடிக் கொண்டிருப்பதை அவதானித்தார். நண்பன் தன்னைக் கண்டதை உணர்ந்த அந்தோனியார் தான் இறக்கும் வரைக்கும் இந்த சம்பவத்தினை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வாக்குறுதி கேட்டுக் கொண்டார். தூய அந்தோனியார் தனது 35ஆவது வயதில் ஃபர் கீழ் என்னும் நோயினால் நோயுற்று இருந்தபோது தனக்கு மரணம் வருவதை உணர்ந்து என்னை பாதுவா நகருக்குக்கொண்டு செல்லும்படி கேட்டார்.அதன்படி பாதுவாவுக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே Arcella என்னும் ஊரில் இறந்தார். பின் சான்டா மரியா மேட்டர் டோம்னி என்னும் சிறிய ஆலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது. இவ்வாலயம் இன்று பசிலிக்கா ஆலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவர் இறந்து ஒரு வருடத்திலேயே அக்காலத்து பாப்பரசர் 9ஆம் கிறகோரி அந்தோனியாருக்கு புனிதர் பட்டம் கொடுத்தார். தூய அந்தோனியார் 1230ஆம் ஆண்டு தனது 35ஆவது வயதில் இறந்ததில் இருந்து 33 வருடங்களின் பின்னர் அதாவது 1263ஆம் ஆண்டு அவரது கல்லறையினைத் திறந்த போது உடலின்

தசை. நார்மண்டலங்கள் எல்லாம் அழிந்து போய் இருந்தது. ஆனால் அவரது “நா” மட்டும் அழியாமல் இருந்தது. இது உயிருடன் இருப்பது போன்று மிகவும் மென்மையாகவும் இருந்தது. இது எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இன்றும் அவரது “நா” அழியாது ஆலயத்தில் (ஆலயங்களில்) உள்ளது. 1680ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடை பெற்றுக்கொண்டு இருந்த போது பரிந்துரைக்காகச் சென்ற நபர் ஒருவர் அவரின் கைகளில் லில்லிப் பூச்செண்டு ஒன்றை வைத்து வணங்கி விட்டுச் சென்றார். சில நாட்களின் பின் அந்த நபரால் வைக்கப்பட்ட பூச்செண்டு வாடாது இருந்தது மட்டுமல்லாது மேலும் இரண்டு பூக்கள் பூத்தபடியும் இருந்தது. மேன்மேலும் அந்தோனியார் புகழும், ஆராதனை வழிபாடும் அதிகரிக்கச் செய்தது. இன்று உலகில் அநேக நாடுகளில் பல்வேறு இடங்களில் அந்தோனியார் ஆலயங்கள் காணப்படுகின்றது மட்டுமல்லாது புதிதாகவும், புதிய ஆலயங்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றது. இதனூடாக ரில்லியன் கணக்கான மக்களுக்கு புதுமைகளினை செய்து கொண்டே இருக்கிறார். குறிப்பாக நோய் வாய்ப்பட்டவர்களின் பாதுகாவலர், காணாமல் போனவற்றை கண்டெடுக்க செய்பவர். குழந்தைப் பாக்கியத்தினை வழங்குபவர் என்று எண்ணற்ற புதுமைகளையும் செய்து கொண்டே இருக்கிறார். இன்று எம்முடன் சுன்னாகம் பதியினூடாகவும் பல அற்புதங்களைச் செய்த வண்ணமே இருக்கின்றார்.

“புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்”

திருமதி J.பெனாட்ஜோ கலஸ்ரின்

Scroll to Top