திருஅவையில் இரு புதிய புனிதர்கள் – புனித ஃபிரசாத்தி, புனித அகுதீஸ்
செப்டம்பர் 7, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அருளாளர்களான பியர் ஜார்ஜோ பிரசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் ஆகிய இருவரையும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியானது, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தில் புனிதர் பட்ட திருப்பலியானது நடைபெற்றது. இலட்சக் கணக்கான மக்கள் அதிகாலை முதலே கூட்டம் கூட்டமாக புதிய புனிதர்களை நினைந்து போற்ற உரோம் நோக்கி வந்தனர். திருப்பலிக்கு முன்னதாக வளாகத்தில் கூடியிருந்த மக்கள் முன்பாக சிறு உரை ஒன்றினை ஆற்றினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. திருப்பலியில் பங்கேற்க வந்திருக்கும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அருள்பணியாளர்கள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நாம் அனைவரும் புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறி திருப்பலியில் நன்முறையில் பங்கேற்க அனைவரையும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தையையும் அவரது குரலையும் கேட்ட மக்கள் கரவொலி எழுப்பியும் மகிழ்ச்சிக் கூக்குரல் எழுப்பியும் தங்களது உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தினர்.
வருகைப்பாடல் பாடப்பட பீடப்பணியாளர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், கர்தினால்கள் என அனைவரும் திருத்தந்தையுடன் பவனியாக திருப்பலி பீடத்தினை வந்தடைந்தனர். சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலியினை இலத்தீன் மொழியில் நிறைவேற்றினார். த்கிருஅவையில் மேலும் இரண்டு புனிதர்களைக் கொடுப்பதற்கான தூய ஆவியின் அருளை வேண்டி பாடல் ஒன்று பாடப்பட்டது. புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ அவர்கள், திருத்தந்தையிடம் அருளாளர்கள் பியர் ஜார்ஜோ பிரசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் ஆகியோர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார். புதிய புனிதர்களின் வாழ்க்கை குறிப்பானது திருப்பயணிகள் அனைவருக்கும் வாசிக்கப்பட்டது.
புனித பியர் ஜோர்ஜோ ஃபிரசாத்தி
1901-ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று இத்தாலியின் தூரின் பகுதியில் பிறந்தவர். மிகவும் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த இவர், தனது தொடக்கக் கல்வியை தனது இல்லத்திலே பெற்று, அதன்பின் மாசிமோ தஷேலியோ என்னும் பள்ளியில் சேர்ந்து பயின்றார். தனது 10 வயதில் திருநற்கருணையை தனது சகோதரி லூசானா என்பவருடன் இணைந்து பெற்றார். கோடை காலத்தில் சிறிய செபமாலையாளர்கள் என்னும் இயக்கத்தில் சேர்ந்தார். இயேசு சபையாரின் கல்வி நிறுவனங்களில் தனது கல்வியைக் கற்ற அவர், திருத்தூது செபக்குழு, திருநற்கருணை செபக்குழு என பல குழுக்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அடிக்கடி ஒப்புரவு அருளடையாளாம் பெறுதல், செபித்தல், திரு நற்கருணை ஆராதனை போன்றவற்றினால் தனது நம்பிக்கையை ஆழப்படுத்தி வளர்த்துக்கொண்டார். 1918-ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியலாளராகக் கல்வி பயின்ற இவர். ஏழைமக்களைச் சந்தித்தல், அவர்களுக்கு உதவுதல் போன்றவற்றில் தனது பெரும்பாலான நேரங்களைச் செலவிட்டார். 1925-ஆம் ஆண்டு போலியோ அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட அவர், பக்கவாதமுற்று இறுதி அருள்சாதனங்களைப்பெற்று அதன்பின் இறைபதம் சேர்ந்தார். 1925ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று இறந்த ஃபிரசாத்தி ஏறக்குறைய 100 ஆண்டுகள் கடந்த நிலையில் செப்டம்பர் 7 அன்று புனிதராக அறிவிக்கப்பட்டார்.
புனித கார்லோ அகுதீஸ்
இலண்டனில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் பிறந்த கார்லோ அகுதீஸ் அவர்கள் தனது குடும்பத்தாருடன் இத்தாலியின் மிலான் நகருக்குக் புலம்பெயர்ந்தார். பிறந்த 15 நாள்களுக்குப்பின் திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற கார்லோ, வடக்கு இத்தாலியின் மிலான் நகரில் தனது பள்ளிப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும் வாழ்ந்தார். திருநற்கருணை மீது ஆழமான பற்று கொண்டவர். தனது இந்த ஆர்வத்தை பக்தியை எல்லாரும் அறிந்துகொள்ளும் பொருட்டு புதிய வலைப்பதிவை ஆரம்பித்து அதில் உலகில் நடந்த எல்லா திருநற்கருணை வழியாக நடைபெற்ற அற்புதங்களையும் பதிவிட்டார். பங்குப்பணிகளிலும் ஆலயப்பணிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்த கார்லோ 2006ஆம் ஆண்டு எலும்பு மஞ்சை இரத்தப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். புனிதர் பட்ட படிநிலைகளுக்கான ஆய்வு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 மிலான் மறைமாவட்ட அளவில் தொடங்கப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2018ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் நாள் இறை ஊழியராகவும், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று அசிசி நகரில் அருளாளராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், யூபிலி ஆண்டில் அருளாளர் கார்லோ அகுதீஸ் இரண்டாம் நூற்றாண்டின் இளம்புனிதராக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் செப்டம்பர் 7 ஞாயிறன்று வத்திக்கானில் புனிதராக உயர்த்தப்பட்டார்.
புனிதர்களின் வாழ்க்கைக் குறிப்பானது வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனிதர்களின் பரிந்துரையைக் கேட்கும் மன்றாட்டானது இடம்பெற்றது. அதன் பின் திருத்தந்தை அவர்கள், செபம் ஒன்றினை ஏறெடுத்து இந்த இரு அருளாளர்களையும் புனிதர்களாக அறிவித்தார். அதன்பின் புனிதர்களின் அருளீக்கப் பொருள்களுக்கு இடும் தூபப்பொருட்களை அப்புனிதர்களின் பெற்றோர்கள் பீடத்திற்கு பவனியாக எடுத்து வந்து அன்னை மரியா திரு உருவச்சிலைக்கு முன் வைத்தனர். அல்லேலுயா வாழ்த்துக்கீதம் பாடப்பட்டதும் கர்தினல் செமராரோ திருத்தந்தைக்கு நன்றி கூறினார். மக்கள் அனைவரும் இணைந்து வானவர் கீதத்தை மகிழ்வுடன் பாடி புதிய புனிதர்கள் அறிவிக்கப்பட்ட மகிழ்வினை வெளிப்படுத்தி இறைவனைப் புகழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து திருப்பலியின் இறைவார்த்தை வழிபாட்டு பகுதிகள் தொடர்ந்து நடைபெற்றன. சாலமோன் நூலில் இருந்து இறைவார்த்தையானது முதல் வாசகமாக ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினர் திருப்பாடல் எண் 89 ஐப் பதிலுரைப்பாடலாகப் பாடினர். திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இறைவார்த்தைகள் இரண்டாம் வாசகமாக இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட்டன. லூக்கா நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் நற்செய்தி வாசகமாக எடுத்துரைக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் மறையுரையினை வழங்கினார். திருத்தந்தையின் மறையுரைச் சுருக்கம் இதோ.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
முதல் வாசகத்தில், ஆண்டவரே, நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? (சா. ஞா:9:17) என்ற ஒரு கேள்வியை நாம் வாசிக்கக்கேட்டோம். இரண்டு இளம் புனிதர்களான பியர் ஜார்ஜோ ஃபிராசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் ஆகியோர் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்தக் கேள்வி வருகிறது, இக்கேள்வி இறைமயமானது, ஏனெனில் சாலமோனின் ஞான நூலில், இக் கேள்வி அவர்களைப் போன்ற ஓர் இளைஞனான சாலமோன் அரசருக்கு வருகின்றது. அவரது தந்தை தாவீதின் மரணத்திற்குப் பிறகு, ஆற்றல், செல்வம், ஆரோக்கியம், இளமை, அழகு மற்றும் முழு அரசு என பல விடயங்கள் தனக்கு இருப்பதை அவர் உணர்ந்தார். “எதையும் இழக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை அவரது இதயத்தில் எழுப்பியது இந்த மிகுதியான வளங்கள்தான். பதிலைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி, கடவுளின் திட்டங்களை அறிந்து அவற்றை உண்மையாகப் பின்பற்றுவதற்காக, அவருடைய ஞானத்தையே பெரிய கொடையாகக் கேட்பதுதான் என்பதை சாலமன் புரிந்துகொண்டார்.
இயேசுவும் நற்செய்தியில், நாம் முழு மனதுடன் நம்மை அர்ப்பணிக்க வேண்டிய ஒரு திட்டத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார். தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. (லூக் 14:27); மேலும், “உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது” என்றும் கூறுகின்றார். அவருடைய ஆவியிலிருந்து வரும் அறிவாற்றலாலும், பலத்தாலும், அவருடைய வார்த்தையைக் கேட்பதற்காக, நாம் இணைந்திருக்கும் விஷயங்கள் மற்றும் கருத்துக்களை விட்டுவிட்டு அவரைப்பின்பற்ற நம்மை அழைக்கிறார்.
சாலமோனைப் போலவே, அசிசியின் புனித பிரான்சிஸை நினைத்துப் பார்ப்போம். இளமையாகவும் செல்வவளம் மிக்கவராகவும் இருந்த அவர் மாட்சிமை மற்றும் புகழுக்கான தாகத்துடனும் இருந்தார். எனவே தான் அவர் போருக்குச் சென்று பட்டங்களாலும் மரியாதைகளாலும் தன்னை அலங்கரிக்க நினைத்தார். ஆனால் இயேசு வழியில் அவருக்குத் தோன்றி, அவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதைப் பற்றி சிந்திக்கச் சொன்னார். சுயநினைவுக்கு வந்த அவர், கடவுளிடம் “ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்ற ஓர் எளிய கேள்வியைக் கேட்டார். அங்கிருந்துதான், அவர் தனது வாழ்க்கையை மாற்றி, கடவுளைப் பின்பற்ற எல்லாவற்றையும் களைந்து, வறுமையில் வாழ்ந்தார். தனது தந்தையின் தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற ஆடைகளை விட தனது சகோதர சகோதரிகளின் அன்பை, குறிப்பாக பலவீனமான மற்றும் சிறியவர்களின் அன்பை விரும்பினார் என்ற அவரின் வாழ்க்கைக் கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
இதேபோன்ற எத்தனையோ புனிதர்களை நாம் நினைவு கூர முடியும்! சில சமயங்களில் நாம் அவர்களை பெரிய மனிதர்களாக கருதிவிடுகின்றோம். ஆனால் அவர்கள், இளமையாக இருந்தபோது, கடவுளுக்கு “ஆகட்டும்” என்று சொல்லி, தங்களுக்கு எதையும் வைத்திருக்காமல், முழுமையாக அவருக்குக் கொடுத்தபோது தொடங்கியது இந்த புனிதமான வாழ்க்கை என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
இத்தகையச் சூழலில், இன்று நாம் புனித பியர் ஜார்ஜோ ஃப்ராசாத்தி மற்றும் புனித கார்லோ அகுதீஸைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞன், நம் காலத்தைச் சேர்ந்த ஒரு பதின்பருவத்தினன் ஆகிய இருவரும் இயேசுவை அன்பு செய்து, அவருக்காக எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருந்த இருவரைப் பார்க்கின்றோம்.
பியர் ஜார்ஜோ பள்ளி மற்றும்– கத்தோலிக்கச் செயல்பாடுகள், புனித வின்சென்ட் தே பவுல் மாநாடுகள், FUCI (இத்தாலிய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பு), டொமினிகன் மூன்றாம் நிலை என பல தலத்திருஅவைக் குழுக்கள் வழியாக இறைவனைச் சந்தித்தார். செபம், நட்புறவு, தொண்டுப்பணிகள் ஆகிவை கொண்டு வாழ்வதிலும் கிறிஸ்தவராக இருப்பதிலும் மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு சான்றளித்தார். இது அவரது வாழ்வில் மிகவும் தெளிவாகத் தெரிந்ததால், ஏழைகளுக்கான பொருட்களை நிரப்பிய வண்டிகளுடன் அவர் தூரின் தெருக்களில் நடந்து செல்வதைக் கண்ட அவரது நண்பர்கள், அவருக்கு ஃபிரசாத்தி போக்குவரத்து நிறுவனம் என்று பெயர் வைத்து அழைத்தனர். பியர் ஜார்ஜோவின் வாழ்க்கை எளிய ஆன்மிகத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. அவருக்கு, நம்பிக்கை ஒரு தனிப்பட்ட பக்தி அல்ல, ஆனால் அது நற்செய்தியின் சக்தியாலும், திருஅவைச் சங்கங்களில் அவர் உறுப்பினராக இருப்பதாலும் இயக்கப்பட்டது. தாராளமான அர்ப்பணிப்புடன் சமூகத்தில் பணியாற்றினார். அரசியல் வாழ்க்கைக்கு, ஏழைகளின் பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
கார்லோ அகுதீஸ், தனது பெற்றோரான அந்திரேயா மற்றும் அந்தோனியா வழியாகக் குடும்பத்தில் கிறிஸ்துவை சந்தித்தார். இத்திருப்பலியில் பங்கேற்கும் பெற்றோருக்கும் அவரது இரட்டைச் சகோதரர்களான பிரான்செஸ்கா மற்றும் மைக்கேல் ஆகியோருக்கு நன்றி. அதன்பின்னர் பள்ளியில், எல்லாவற்றிற்கும் மேலாக பங்குத் தளத்தில் சிறப்பிக்கப்படும் எல்லா திருவருள்சாதனங்களில் அகுதீஸ் பங்கேற்றார். ஒரு குழந்தையாகவும் இளைஞனாகவும் இருந்த நாட்களில் செபம், விளையாட்டு, படிப்பு பிறரன்புப் பணிகள் ஆகியவற்றில் இயல்பாகவே தன்னை ஒருங்கிணைத்து வளர்ந்தார்.
பியர் ஜார்ஜோவும் கார்லோவும் கடவுள் மீதும் தங்கள் சகோதர சகோதரிகள் மீதும் தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டனர், அன்றாடத் திருப்பலி, செபம் மற்றும் குறிப்பாக திருநற்கருணை வழிபாடு என அனைவருக்கும் கிடைக்கும் எளிய செயல்கள் வழியாக அன்பை வளர்த்துக்கொண்டனர். “சூரியனுக்கு முன்னால், நின்று அதன் ஒளியைப்பெறும் நாம் நிறம் மாறுகின்றோம் அதுபோல திருநற்கருணைக்கு முன்பாக நாம் ஒரு புனிதராக மாறுகின்றோம் என்று கார்லோ அகுதீஸ் கூறுவார். மேலும் “உங்களைப் பார்ப்பது சோகம் கடவுளைப் பார்ப்பது மகிழ்ச்சி” என்றும், “மனமாற்றம் என்பது நமது பார்வையை கீழிருந்து மேலே நகர்த்துவதைத் தவிர வேறில்லை; கண்களின் எளிய அசைவு ஒன்றே போதுமானது” என்றும் கூறுவார்.
பாவ மன்னிப்பு அருளடையாளத்தை அடிக்கடி பெற்ற அகுதீஸ் அவர்கள், “நாம் உண்மையில் பயப்பட வேண்டிய ஒரே விடயம் பாவம் மட்டுமே என்றும் கூறுவார். மேலும் “மக்கள் தங்கள் உடலின் அழகில் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர், அவர்களின் ஆன்மாவின் அழகைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. என்பது குறித்து மிகவும் ஆச்சர்யமும் அடைந்தார்.
இறுதியாக, இவ்விருவரும் புனிதர்கள் மற்றும் கன்னி மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் தாராளமாக தர்மம் செய்தனர். ஏழைகள் மற்றும் நோயாளிகளைச் சுற்றி, நம்மிடம் இல்லாத ஒரு ஒளியை நான் காண்கிறேன்” என்று கூறிய பியர் ஜார்ஜோ, தானதர்மத்தை நமது மதத்தின் அடித்தளம் என்று அழைத்தார். சிறிய, உறுதியான செயல்கள் வழியாக நமது அண்டை வீட்டாரில் காணப்படும் ஒரு புனிதத்தை வாழ்ந்து காட்டினார் புனித அகுதீஸ்.
நோயினால் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் இளம் வயதிலேயே வாழ்க்கையை இழந்தபோதும், கடவுளிடம் அன்பு செலுத்துதல், தங்களை அர்ப்பணித்தல், கடவுள் செய்த எல்லாவற்றிற்காகவும் அவரைப் புகழவும் அவரிடம் செபிக்கவும் அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதில்லை. “என் இறப்பின் நாள் என் வாழ்க்கையின் மிக அழகான நாளாக இருக்கும்” என்று கூறியவர் பிரசாத்தி. அவரை விட இளையவரான கார்லோ, விண்ணகம் எப்போதும் நமக்காகக் காத்திருக்கிறது என்றும், நாளையை நாளை அன்பு செய்வது என்பது இன்றைய நாளில் நமது சிறப்பான பலனைக் கொடுப்பதாகும் என்று கூறியவர்.
அன்பான நண்பர்களே, புனிதர்கள் பியர் ஜார்ஜோ ஃப்ராசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் அவர்களின் வாழ்க்கையானது, நம் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்கள், தங்களது வாழ்க்கையை வீணாக்காமலும், அவர்களை முன்னோக்கி வழிநடத்தி, தலைசிறந்த படைப்புகளாக மாற்றுவதற்கான அழைப்பாகும். “நான் அல்ல, கடவுள்” என்று கூறிய கார்லோ தனது வார்த்தைகளால் நம்மை ஊக்குவிக்கிறார்கள். எல்லா செயல்களிலும் கடவுளை மையமாகக் கொண்டிருந்தால், நீங்கள் அதற்கான முடிவை அடைவீர்கள்” என்று புனித பியர் ஜோர்ஜோ அழைக்கின்றார். இதுவே அவர்களின் தூய்மையான எளிமையான புனிதத்துவ வாழ்க்கைக்கான வெற்றிகரமான சூத்திரம். இதுவே வாழ்க்கையை நாம் முழுமையாக அனுபவித்து, விண்ணக விருந்தில் கடவுளைச் சந்திக்கவும், பின்பற்றவும் அழைக்கப்பட்ட சான்றாகவும் உள்ளது.
திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் அறிக்கையானது இலத்தீன் மொழியில் பாடலாகப் பாடப்பட்டது. அதன்பின் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் இஸ்பானியம், அரபு, பிரெஞ்சு, கொரியம், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. திருநற்கருணை வழிபாட்டுக்குத் தேவையான காணிக்கைப் பொருள்கள் திருத்தந்தையிடம் காணிக்கைப்பவனியாக வழங்கப்பட்ட பின்னர், திருப்பலியின் திருநற்கருணை வழிபாடானது ஆரம்பமானது.
மக்கள் அனைவரும் மிகுந்த பக்தியுடனும் உள்ள மகிழ்வுடனும் இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையை வழங்கி திருப்பலியினை நிறைவு செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்