சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் சார் பங்கு மக்களின் கலையும் அதனூடாகப் பெறப்பட்ட அனுபவங்களும் சார்ந்த ஒரு மதிப்பீடு

கலை என்பது நம் முன்னோர் கூறியது போன்று இயல், இசை, நாடகம் என்னும் முப்பரி மாணம் கொண்டதாகும். இவற்றினை நாம் விரிவாகப் பார்ப்போமாயின் கூத்து மரபில் நாட்டுக் கூத்து வடமோடி, தென்மோடி மன்னார் பாங்கு இசை நாடகம், சிந்துநடை, காத்தவராயன் கூத்து என பல்வேறு கோணங்களில் விரிவுபட்டுச் செல்கின்றது. மற்றும் நாடகம் என்னும் போது இசை நாடகம், பரதநாட்டியம், நாட்டிய நாடகம், வரலாற்று நாடகம், சமூக நாடகம், குறியீட்டு நாடகம் என அதுவும் விரிவுபட்டுச் செல்கின்றது.

மேற்கூறப்பட்ட முத்தமிழும் மேடையேற்றப்படும் போது ஒரு வரலாற்றை அல்லது கற்பனையை மையமாக வைத்து இலகுவான பேச்சுவழக்கிலும், நடிப்பிலும் பாடலிலும் கருப்பொருள் பிசகாமல் பார்வையாளரைச் சென்றடையச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்தவகையில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பங்கு மக்களால் அரங்கேற்றப்பட்டதற் கான ஆதார பூர்வமான அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1963ம் ஆண்டு வைத்திய கலாநிதி டாக்டர் எட்வேட் அவர்களுடன் காலஞ்சென்ற டேவிற் ஆசிரியர் அவர்கள் இருவரினதும் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட ‘பலித்த கனவு’ என்னும் நாடகம் ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்கள் மேடையேற்றப்பட்டது ஒரு வரலாற்று முதல் பதிவாகும். இந்நாடகத்தின் நடிகர்களாக காலஞ்சென்ற கிறிஸ்துராசா. அ.கீதபொன்கலம். அ.அலோசியஸ், தங்ககுலசிங்கம், அருளானந்தம் காலஞ்சென்ற சாந்தப்பர், சூசைதாஸ். காலஞ் சென்ற வெந்தஸ்லாஸ், திருச்செல்வம், சூ.அல்வீனஸ் காலஞ்சென்ற அ.அருட்பிரகாசம் ஆசிரியர் போன்ற கலைஞர்களால் நடித்து காண்பிக்கப்பட்ட நாடகமாகும்.

அதனைத் தொடர்ந்து 1965ஆம் ஆண்டு அப்போதைய சுன்னாகம் பங்குத்தந்தையும் திருமறைக் கலாமன்ற இயக்குநருமாகிய அருள் திரு மரியசேவியர் அடிகளார் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு இலங்கையில் முதன்முதலாக மேடையேற்றப்பட்ட மிகப்பிரமாண்டமான நாடகம் (பாஸ்) யேசுவின் திருப்பாடுகளின் காட்சி எனும் நாடகம் உரும்பிராய் புனித மைக்கேல் தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக யாழ். முற்ற வெளியில் மேடையேற்றப்பட்டது. இப்போது வருடாவருடம் மேடையேற்றப் பட்டாலும் இதுபோன்ற அமைப்புடைய நாடகம் இல்லை என்று இப்போதும் கூட மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். இதில் ஒப்பனை உடுப்பு போன்றவற்றை காலஞ்சென்ற சவரிமுத்து அ.அருளப்பு போன்றவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். நடிகர்களாக காலஞ்சென்ற எந்திரி சாந்தப்பர். கலைவேந்தன் தைரியநாதன், அருளானந்தம், அருட்பிரகாசம், தேவதாஸ், ஆசைதாஸ் போன்ற நடிகர்களுடன் உரும்பிராய், மல்லாகம், குளமங்கால் போன்ற ஆலய பங்கு கலைஞர்களும் சேரர்ந்து நடித்தனர்.

அடுத்து 1969ஆம் ஆண்டு அ.வேதநாயகம் அவர்களின் நெறியாள்கையில் தயாரிக்கப் பட்ட மிகப்பிரமாண்டமாக மேடையேற்றப்பட்ட நாடகம் ஒளி இந்நாடகம் பல தடவைகள் மேடை யேற்றப்பட்டாலும் ஆலயத்தில் 1973ஆம் ஆண்டும். அதற்குப் பின்னரும் மேடையேற்றப் பட்டதாகச் சான்றுகள் உள்ளன. இதில் மு.சிவதாஸ் ஆசிரியர், .இராசதுரை, அல்வினஸ். R.இராசநாயகம், அலோசியஸ். ப.அன்ரன் அமலதாஸ். ஆ. யோசேப் ஞானரட்ணம். எஸ். செப்ரட்ணம், வே.றெஜினோல்ட் யோ.மோசேஸ் தையஸ்ரீன் ஜெயலூட் ஆ.பத்திநாதர் ஆகியோருடன் இன்றும் பல கலைஞர்களால் சேர்ந்து மேடையேற்றப்பட்ட நாடகமாகும். இன்றும் கூட இந்நாடகம் பேசப்படுகின்றது.

மேலும் 1972ஆம் ஆண்டு எஸ்.தேவதாஸ் அவர்களின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட நாடகம் இதுதான வாழ்வுப் பாதையா.இது ம.தைரியநாதன் காலஞ்சென்ற இராசகுலசிங்கம். ஆர்.இராசநாயகம், அருள்பிரகாசம் போன்ற நடிகர் களால் மேடையேற்றப்பட்டது. அடுத்து 1973 ஆம் ஆண்டு மிகப்பிரமாண்டமான முறையில் காலஞ் சென்ற ப.அமலதாஸ் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட நாடகம் கண்ணாடி முனை இதில் அருள்பிரகாசம் அமலதாஸ். தைரியநாதன். ஆ.பேதுருப்பிள்ளை போன்ற பல கலைஞர்களால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றி இன்றும் பேசப்படுகின்றது.

1986ஆம் ஆண்டளவில் வண.பிதா யோகராசா அடிகளாருடைய காலத்தில் இளைஞர் மன்றத்தால் ‘யேசு புகழ்பாடி என்னும் இசைக்குழு உருவாக்கப்பட்டு எம் கலைஞர்களால் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு. பக்திப்பாடல்கள் பாடப்பட்டு பல தடவைகள் மேடையேற்றப்பட்டது. இதில் ர. ரட்ணபோஸ், யோசேப் ஞானரத்தினம், ஜெயசீலன், ராசகுமார். டொமினிக்ஜீவா. யூட்மரியரத்தினம், பற்றிக் ர.செபரட்ணம், அற்புதஞானசீலன், ஏ.அருட்பிரகாசம், ஏ.அனஸ்ரீன், மதி. ப.அன்ரன் மரியதாஸ் போன்ற இளைஞர்களால் மேடையேற்றப்பட்டது.

1994ஆம் ஆண்டளவில் ஆர்.இராசநாயகம் அவர்களின் தயாரிப்பில் மனமாற்றம் என்னும் நாடகம் 2016இல் ஊதாரிப்பிள்ளை என்னும் நாடகமும் மேடையேற்றப்பட்டது. இதில் ஜெயசீலன். யோசேப்பு, சுஜீவ்கில்மத்தியூஸ், அன்ரனிராஜன் குணம், யோகராசா, கொன்சன் போன்ற நடிகர்களால் நடிப்பித்து காண்பிக்கப்பட்டது. 2000, 2001, 2002.

1992ஆம் ஆண்டு எங்கள் பங்கின் முக்கியமான ஆண்டாகும். அ.வேதநாயகத்தின் ஒளி நாடகம் மீண்டும் மேடையேற்றப்பட்டது. அதில் கலைவேந்தன் தைரியநாதன் மேற்கொண்டகலைச் சேவையை பாராட்டி (பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க்) அவருக்கு பொன்னாடை போர்த்தி கலைத்தென்றல் என்னும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் அவரின் மயான காண்டம், பூதநம்பி போன்ற நாடகங்களும் மேடையேற்றப்பட்டன. அதில் தைரியநாதன் சுயாநந்தி எஸ்.கே.மரியதாஸ் செல்வரட்ணம் போன்ற கலைஞர்களால் மேடையேற்றப்பட்டது. இதில் மூவேந்தர் என்னும் நாடகமும் பப்ரிசன் யூட் மரிய சேவியர் அவர்களின் தயாரிப்பில் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2001ஆம் ஆண்டு வேதநாயகம் அவர்களின் தயாரிப்பில் எம்பங்கு இளைஞர்களால் மேடை யேற்றப்பட்டு இளவாலை கோட்டமட்டப் போட்டியில் சிறந்த நாடகம் என தெரிவுசெய்யப்பட்டு பரிசினைப் பெற்றது. இதில் மரியசீலன் பிலிப் அன்ரன் மரியதாஸ் போன்றோருடன் இன்னும் பல கலைஞர்கள் இதில் நடித்தார்கள். அடுத்து 2002ஆம் ஆண்டளவில் ஜே.கே. மரியதாஸ் அவர்களின் தயாரிப்பில் விடியலை நோக்கி என்னும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இதில் சீலன் அன்ரனி யா.பிலிப், லெபோன், யோகராசா, கொன்சன் போன்றவர்களால் மேடையேற்றப்பட்டது. இதேயாண்டு ஆர்.இராசநாயகத்தின் தயாரிப்பில் யேசு ஏன் அழுதார் என்னும் நாடகமும் மேடையேற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டுப.வீனஸ்சகாயதாஸ் அவர்களின் தயாரிப்பில் பேசா நாடகம் (ஊமம் பல கலைஞர் களால் மேடையேற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வில் திருமறைக் கலாமன்றத்தினால் பிரபா என்பவரால் நெறிப்படுத்தப்பட்ட ஏமாந்தன் ஏரோதன் என்னும் நாட்டுக்கூத்து எம்பங்கு, இளைஞர்களால் நடித்து காண்பிக்கப்பட்டது. இதில் ம.டென்சில்போ.அன்ரனி லெம்பேட்ட இ.அன்ரூ பி.டெஸ்மன் இவர்களுடன் இன்னும் பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஒளி விழாவில் 2012ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட இளையோர் மன்னத்தால் நடிக்கப்பட்ட ஏமாந்தான் ஏரோதன் என்னும் நாட்டுக்கூத்து புனித சூசையப்பர் மன்றத்தினால் மிகச் சிறப்பான முறையில் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பல தந்தையர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஆர்.இராசநாயகம். ப.அன்ரன் மரியதாஸ், அ.யூட்சன். ஜெனேசியஸ்தாஸ், யோகராஜன், அன்ரனிராஜன், யோசேப்ஞானரத்தினம். இரத்தினபோஸ். காலஞ்சென்ற கிறிஸ்ரி அமலன், கி.அலோசியஸ், கியோமர் மரியதாஸ், தொ.போல்சுகசெல்வம். சூ.அல்வீனஸ் போன்ற நடிகர்களால் மேடையேற்றப்பட்டு பேசப்படுகின்ற நாடகமாக பதிவு செய்யப்பட்டது.

மேலும் வருடாவருடம் நடைபெறுகின்ற ஒளிவிழாவினை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்களில் இருந்து தந்தையர் அன்னையர் உட்பட ஏதாவது ஒரு நிகழ்ச்சியினை மேடை யேற்றுவது எம் பங்கின் மரபு. இதில் கோலாட்டம், விவாதரங்கு, கவிதை அரங்கம், வில்லுப்பாட்டு, நடனம், குழுநடனம், நாடகம் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒளிவிழா நிகழ்வினை முன்னிட்டு சுன்னாகம் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, முகாமையாளர்களால் எங்கள் ஆலயத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை தங்கள் தங்கள் வங்கிகளில் நிகழ்த்தி பரிசில்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய கலையும் பெறப்பட்ட அனுபவம் சார்ந்த ஒரு சிறிய மதிப்பீடு நிறைவுறுகின்றது.

திரு.எஸ்.கியோமர் மரியதாஸ்

Scroll to Top