புனிதரின் கருவறை அடைக்கலத்தின் அனுபவங்கள்

ஆண்டவரின் மேலான மேன்மை மிகு மாணிக்கமே மேவும் உன் கரங்களுக்கு எம் அன்பு வணக்கங்கள் பதுவைப் பதியின் புனிதரே பதம் பணிந்தோம் எம்பங்கில் நிலையாய் குடிகொண்டாய் சரணடைந்தோம்

ஆண்டாண்டாய் ஆண்டு அருள் பொழியும் அற்புதரே மீண்டுமாய் நன்றி சொல்லி வேண்டுகின்றோம் உம்பதமே

சுன்னாகம் பதியுறைந்த சுடர்விடு அகல்விளக்கே சுமைதாங்கி போலவே எமைத்தாங்கி நீ நின்றனையோ

“கோவில் வளவில்” கால் பதிக்கும் வேளைகளில் ஆவியில் தோன்றும் ஓர் அமைதியின் பிரவாகம்

“கோவில்படி” ஏறி உன்தாள் பணிகையிலே அல்லல்கள் மத்தியிலும் ஓர் ஆழமான மனஒடுக்கம் “கோவில் அடி” நின்று முழந்தாளில் நடக்கையிலே அற்புதரின் அருள்கண்ட ஆறுதலின் மனவடிவம் “கோவில் மடி”யில் தலைசாய்த்து இருக்கையிலே அன்னை மடியில் தலைசாய்ந்த ஆறுதல்கள் “கோவில் திண்ணை” களில் தவழ்ந்த நாள்முதலாய் ஆசான்கள் தரும் மறைக்கல்வி போதனைகள் “கோவில் முற்றம்” தரும் கலை மறையின் மறை அறிவு

அதனோடு கூடவே விளையாட்டு விழா நிகழ்வு நவநாள் மறைதரும் மனமாற்ற அறிவுரைகள் திருநாள்களில் நீ தரும் வாழ்வியல் வழிமுறைகள் உன் திருமண்டலத்தை ஆழமாய் நோக்கையிலே எம் விழிகளில் கசியும் இதயத்தின் ஈரங்கள்

சிலநாள் சிரித்தோம் சிலநாள் அழுதோம் அனைத்தும் உன்பதம் அடைக்கலம் கொடுத்தோம் கருவறை முதலாய் கல்லறை வரைக்கும் கருத்துடன் நீ தரும் காலங்கள் அறிந்தோம் கலைத்துளிகளில் கணக்கற்றோர் வாழ்வினிலே காவலரே யாவர்க்கும் கனிவுடன் துணை நின்றீர் இனிவரும் காலமும் உமதுணை தந்தெமைக் காத்திட வேண்டி உம்பதம் பணிகின்றோம் வேண்டுதல்கள்…

அன்னையர் தந்தையர் அத்தனை பேரோடும் இளைஞர் யுவதிகள் பள்ளிச் சிறார்கள் பால்குடி மறவா பச்சிளங் குழந்தைகள் முதுமையைத் தேடுவோர் தனிமையில் வாடுவோர் அரவணைத்தருளும் திருச்சபையின் தீபமே

பங்கில் விளைந்த நற்பயன்தரு விருட்சமாய் திருநிலை பெற்ற அருட்பணியாளர்கள் நித்திய வாக்கை தத்தமாய் கொண்ட அருட்சகோதரிகள் அனைவரின் வாழ்வையும் சேமமாய்க் காரும் கற்பினில் லீலியே

தொழில் துறை புரிவோர் தொலைவிடம் வசிப்போர் தொலைதூரம் பயணம் தொடர்ந்து செய்வோர் புனிதரே உம்பதி மனதில் கொண்டு புலம்பெயர்ந்தே வாழும் பங்கு மக்கள் அனைத்துப் பேருடன் நீர் வழித்துணை செல்ல வருந்தி அழைக்கின்றோம்

இளையோர் உருவாக்கம் கன்னியர் கரையேற்றம் குழந்தைப் பாக்கியம் குடிகளில் அமைதி மனமடிவுகளில் இறைவனைத் தேடல் நோய் நொடிஅற்ற நீடிய வாழ்வு அளித்திட வேண்டும் புண்ணிய ஸ்துதியரே பங்குத்தந்தையுடன் பங்குத்திருச்சபை அன்பியக் குழுக்கள் அருட்பணிச்சபைகள்
தந்தையர் அன்னையர் இளையோர் மன்றங்கள் திருப்பாலர் சபையுடன் உதவும் சபையும் மறைக்கல்விக் குழுக்கள் மறையாசிரியர்கள் ஆண்டு வழிநடத்தும் எம்பங்கின் பாதுகாவலரே

இதுவரை காலமும் பங்கினைத் தாங்கிய அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள் மறையுரை தந்த மாசில்லாக் குருக்கள் துறவற வாழ்வுக்கு வித்திட்டவர்கள் புனிதமாய்க் காரும் தேவசினேக அனலே

உடல்நலக் குறைவால் உன்னருள் வேண்டுவோர் உளநலக் குறைவால் உயிர்வரை முனகுவோர் எதிர்காலம் நினைத்தும் எதிரிகள் குறித்தும் ஏற்றவாழ்வின்றி ஏக்கமடைந்தோர் சிறைகளின் இருப்பை ஆயுளாய்க் கொண்டோர் அனைவரின் வாழ்வையும் கையேற்றருளும் பரமசஞ்சீவியே புனிதரின் உறவில் மனநிறைவடையும் பிறமதம் சார்ந்த பக்தர்கள் மேலும் உன் அருளால் நலமுடன் வாழ வரமொன்று அருள்வாய் கோடி அற்புதரே

இந்நாள் வரைக்கும் பங்கிற்காய் உழைத்து இறைவனடி சேர்ந்தோர் அனைவருடனும் இயற்கை மரணம் எய்திய உறவுகள் கோரவிபத்தாலும் கொடிய வியாதியாலும் கொடுங்கோல் ஆட்சியில் காணாமல் தொலைத்தோர்

யுத்தத்தின் விளைவால் ஆவி துறந்தோர் நச்சு ஐந்துக்களால் அடக்கமடைந்தோர் அனைவரின் ஆன்மாவிற்கும் அடைக்கலம் கொடுத்து புனிதர்கள் உறவில் மகிழ்ந்திட அருள்வீர்

திருச்சபை வளர திறம்பட உழைக்கவும் புனிதர்கள் உறவை புனிதமாய்க் காக்கவும் சிலுவைத் தியானம் திருச்செபமாலை அனுதினம் வாழ்வில் அனுபவம் செய்யவும் அருள் தர வேண்டும் சூரமேய்ப்பரே

திருமதி.ஸ்ரெனிஸ்லொஸ் தியோப்பின் கிருபராஜா ஜெசிக்கா

நெதர்லாந்து (Hollend)

Scroll to Top