எமது ஆலய வரலாற்றுத் தொகுப்பில் மூத்தோர் குறிப்புக்கள்
திரு.சூ.அன்ரனிதாஸ்
- புராதன காலம் தொட்டு எமது ஆலயத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத்தையும் அதனைத் தொடர்ந்து வணிகத்துடன் நெசவுத்தொழிலையும் மேற்கொண்டு வந்துள்ளனர். வணிகத்திலும் புடவை வணிகமே இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின் 1966 முதல் 1985 வரையான காலப்பகுதியில் நெசவுத் தொழில் பிரதானம் பெற்றிருந்தது.
- பின் வெளிநாட்டுப் பத்திகளின் அதீத இறக்குமதியால் உள்நாட்டு நெசவுக் கைத்தொழில் மருகிச்சென்று கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது.
- ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாயின் எமது ஆலயத்தில் திருப்பண்டம் என அழைக் கப்படும் தூய அந்தோனியாரின் அழியாத நாக்கின் சிறுபாகம் மக்களின் வணக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் புனிதரின் திருவிழா நிறைவுற்றது. விசுவாசிகளினால் இத்திருப்பண்டம் முத்தி செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.
- நாட்டில் யுத்த சூழ்நிலையில் மக்கள் இடம்பெயர்ந்த போது அக்காலத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஞானராஜ் அடிகளால் யாழ். ஆயர் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் இதுவரையிலும் திருப்பண்டம் எமது ஆலயத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.
திருமதி ரொசாறியோ ராணி
- பழைய ஆலயத்தின் அடிக்கல் 1833 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. ஆசீர்வாதம் என்பவரின் தளவரைவு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
- 14 மரத்தூண்களைக் கொண்டு அவ் ஆலயம் அமைக்கப்பட்டது.
திருமதி அ.சற்குணஅலங்காரம்
- 1874 இல் கட்டப்பட்ட பழைய தேவாலயத்தில் 1962 ஆம் ஆண்டு வரையிலும் இலத்தீன் மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டுள்ளது.
- அருட்தந்தை பீடத்தின் பின்புறம் பார்த்தவாறே திருப்பலி நிறைவேற்றுவார்.
- பல திருநாட்கள் எமது ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. பிற்காலத்தில் ஒரு தேவாலயத்தில் பல திருவிழாக்கள் இடம்பெற முடியாது என ஆயரவையில் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அந்தோனியார் திருவிழா மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இதன்படி மாசி 2இல் காணிக்கை மாதாவிற்கும், மாசி 11 இல் லூர்து மாதாவுக்கும், வைகாசி 31 இல் வணக்கமாதாவுக்கும், ஆனி 13இல் அந்தோனியாருக்கும் திருநாட்கள் கொண்டாடப்பட்டு வந்தன.
- 1975 காலப்பகுதியில் மடு அன்னையின் திருச்சொரூபம் எமது ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
திருமதி லில்லிறோஸ் பாவிலுப்பிள்ளை
- ஆலயத்தின் பரிபாலகர்களாக நான்கு பதவிகள் காணப்பட்டன. அப்பதவிகளாக மூப்பர். மொடதகம், சங்கிலித்தாம், கணக்கப்பிள்ளை என்பன காணப்பட்டன.
- ஆரம்ப காலத்தில் திரு.அந்தோனிப்பிள்ளை ஆசிரியர் என்பவர் ஆலய பூசை உடைகள். பூசைப்ெெபாருட்களை வாங்கிக் கொடுத்தார்.
- 1972 காலப்பகுதியில் தற்போதைய மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் வண ஜோசப் ஆண்டகை பங்குத்தந்தையாக இருந்தபோது பழைய ஆலயம் பழுதடைந் திருந்தமையால் அதை இடித்து புதிய ஆலயம் கட்டவேண்டும் என அனைவரையும் ஆயத்தப்படுத்தினார்.
- இவற்றுக்கு முன்பாக 1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை பெனற் அடிகளார் கோவிலைப் புனரமைக்க சல்லி முட்டிகளை கொடுத்து பணம் சேகரிக்கும் முறையை கொண்டுவந்தார். எனினும் அவர் பங்கு மாற்றலாகிச் செல்ல சல்லி முட்டியில் பணம் சேகரித்தல் ஆர்வமற்றுப் போனது. எனினும் திரு.அருட்பிரகாசம் ஆசிரியர் என்பவர் அதில் ஊக்கமெடுத்து சல்லிமுட்டி மூலம் கட்டடத்திற்கு பணம் சேகரிக்கும் முயற்சியில் இறங்கி பணம் சேகரித்தார்.
- ஜோசப் ஆண்டகையின் பணிக்காலத்தில் பணம் போதாமையால் சிறிது சிறிதாக ஆலயம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
- அனைத்துப்பங்கு மக்களும் ஒன்றுசேர்ந்து சிரமதான முறையில் ஆலயம் கட்டி ஒப்பேற்றப் பட்டது.
- திரு.அலோசியஸ்தர்மராஜா, திரு. மத்தேசு பாவிலுப்பிள்ளை என்போர் கட்டட நிர்மாணத்திற் கான சில பொருட்களை வழங்கினர். எனினும் பங்கு மக்கள் அனைவரதும் பங்களிப்பும் ஒவ்வொருவிதமாக ஆலயத்திற்கு வழங்கப்பட்டன.
- ஆலயம் பகுதி பகுதியாக நிர்மாணிக்கப்பட்டமையாலே ஆலயத்தின் நடுப்பகுதியில் 12 தார்களை நிறுவ வேண்டிவந்தது.
- ஆலய பக்திச்சபைகள் குறித்து கூறுவெெதனில் 1945 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அருட்தந்தை ஆபிரகாம் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது திரு இருதய சபை என்றபெயருடன் இளைஞர்களுக்கான மன்றம் உருவாக்கப்பட்டது. இதற்குத் தலைவராக திரு,கிரகோரி பாவிலுப்பிள்ளை அவர்களும், செயலாளராக (அக்காலத்தில் காரியதரிசி என கூறப்பட்டது) வைத்தியர் ஜோர்ச் அவர்களும் செயற்பட்டனர்.
- ஒவ்வொரு வெள்ளியும் செபமாலை சொல்லி கூட்டம் கூடி வந்தனர்.
- நாளடைவில் இம்மன்றம் தூய அந்தோனியார் இளையோர் மன்றமாக உருவாக்கம் பெற்று இன்றுவரை சிறப்புடன் இயங்கி வருகின்றது.
- இளையோர் மன்றத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டுவரும் விளையாட்டுவிழா ஆரம்பத்தில் திரு.பங்கிராசு, திரு.அருளானந்தம், திரு.அந்தோனிப்பிள்ளை ஆசிரியர் என்போரால் ஆரம்பிக்கப்பட்டது.
- ஆரம்பகால அந்தோனியார் இளையோர் மன்றத் தலைவராக திரு.அமிர்தநாதன் செயற் பட்டதோடு மன்றத்தால் நடத்தப்பட்ட விளையாட்டு விழாவில் திரு.பேரின்பம். திரு. சாந்தப்பர், திரு. அந்தோனிப்பிள்ளை ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.
- 1975 ஆம் ஆண்டளவில் அருட்தந்தை சேகாம் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் யுவதிகளுக்காக தூய றீற்றா மன்றம் உருவாக்கப்பட்டது. இதன் இயக்குநராக திருமதி புவனம் அவர்கள் தொழிற்பட்டார்.
- சிறப்பாகச் செயற்பட்ட இம்மன்றம் பின்னர் மரிய கொறற்றி மன்றம் என்ற பெயருடன் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது.
- 1995 இடப்பெயர்வின் பின் மரியகொறற்றி மன்றமும், தூய அந்தோனியார் இளைஞர் மன்றமும் இணைந்து தூய அந்தோனியார் இளையோர் மன்றமாக திரு.யூட்சன்அவர்களின் தலைமையில் இயங்கி பல சாதனைகளை நிகழ்த்தியது.
- தற்போது இவ்வருடம் 2017 இல் மீண்டும் மரியகொற்ற்றி மன்றம் தனித்துவத்துடன் புத்துயிர் பெற்று இயங்கிவருகின்றுது.
- 1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்னையர்களுக்கான உத்தரிய மாதா மன்றம் உருவாக்கம் பெற்றது. ஆரம்பகால தலைவர்களாக திருமதி.சவியேல், திருமதி கத்தரீனா திருமதி றோசமுத்து ஆகியோர் பொறுப்புடன் செயற்பட்டனர்.
- இதன்போது அனைவருக்கும் உத்தரியம் இம்மன்றத்தால் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தினமும் செபமாலை சொல்லப்பட்டு வந்தது.
- பின் செயற்பாடிழந்த இம்மன்றம் 1976 ஆம் ஆண்டில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை சூசைப்பிள்ளை அடிகளாரின் ஊக்குவிப்பில் திருமதி நட்சத்திரத்திரம் அவர்களின் அயராத உழைப்பில் மீண்டும் இயங்கத்தொடங்கியது.
- அதன்போது நான் மன்றத்தின் தலைவியாக தெரிந்தெடுக்கப்பட்டேன்.
இக்காலத்தில் வீடுகளில் மரியன்னையின் திருச்சொரூபம் கொண்டுசென்று வழிபாடுகள் இடம்பெற்றன. - இதன்போது அவர்கள் சிறப்பாக முன்னின்று செயற்பட்டார்.
- இதன்பின் திருமதி. புவனம், திருமதி சுகிர்த அலங்காரகாம், திருமதி ஜெயமலர் என்போர் தலைவிகளாக செயற்பட்டனர்.
- தொடர்ந்து செயலற்றுப்போன இவ் உத்தரியமாதா அன்னையர் மன்றம் இவ்வருடம் 2017 ஆம் ஆண்டு மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
திருமதி ஞானப்பிரகாசம் மரியநாயகி
- 1835இல் றோ.க.த.க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
- ஆலயத்தில் தினசரி ஞாயிற்றுக்கிழமைகளின் மாலைவேளைகளில் நற்கருணை வழிபாடு இடம்பெற்று வந்தது.
- சனிக்கிழமை மாலை வேளைகளில் லூர்து மாதாவிற்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
- எம் பங்கில் பலர் பிரான்சிஸ்கன் துறவறசபையில் அங்கம் வகித்தனர்.
- இதன்படி திரு.அந்தோனிப்பிள்ளை, திரு.ஞானப்பிரகாசம், திரு. அருளானந்தம், திரு ஜெயம், திரு.பாக்கியத்துரை, திருமதி எட்வேட் ஆகியோரே இவர்கள்
- 1983 தமிழர் பிரதேசத்தில் இனப்பிரச்சனை தோன்ற சிங்கராஜர் என்பவரை ஸ்ரீலங்கா ராணுவம் கைது செய்ய அப்போது அருட்தந்தை சூசைப்பிள்ளை அடிகள் பங்குத்தந்தை யாக இருந்தார். அவரின் வழிகாட்டலில் இளையோரினால் இராணுவத்திற்கு எதிராக அமைதி வழிப் போராட்டம் நடத்தப்பட்டது.
- நாட்டின் யுத்த சூழலால் மக்கள் இடம்பெயர்ந்தபோது பங்குத் தந்தையுடன் இணைந்துதிரு ஞானப்பிரகாசம் அவர்கள் ஆலயத்தை பராமரித்தார்
- அருட்தந்தை யோகராஜா அடிகள் பங்குத்தந்தையாக இருந்தபோது இந்திய இராணு வத்தின் கொடுமைக்கு அஞ்சி ஆலயத்தில் தஞ்சம் புகுந்த வலிகாமம் மக்களுக்கு ஆலய இளையோர்களால் உணவு வழங்கல், முதலுதவி செய்தல், காயப்பட்டவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லல் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன.
- 1985 காலப் பகுதியில் “யேசு புகழ் பாடிகள்” என்ற இசைக்குழு இயங்கியது.
திரு.அன்புராசா
- நான் அறியத்தக்கதாக எமது ஆலயம் நான்கு தடவை வெவ்வேறு பங்கு பிரிப்புகளுக்கு உட்பட்டது.
- அருட்தந்தை பேர்னாட் அடிகள் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் உரும்பிராய், மாகியப்பிட்டி, சுன்னாகம் ஆகிய ஆலயங்கள் ஒரு பங்காக இருந்தன .
- பின் அருட்தந்தை ஆபிரகாம் அடிகள் பங்குத்தந்தையாக இருந்த போது உடுவில் சுன்னாகம், குளமங்கால் ஆலயங்கள் ஒரு பங்காக இருந்தன.
- அருட்தந்தை பீற்றர் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் மானிப்பாய் பங்குடன் எமது ஆலயம் இணைந்திருந்தது.
- தற்போது சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம். குளமங்கால் சவேரியார் ஆலயம். மல்லாகம் தூய புதுமை மாதா ஆலயம், சூராவத்தை தூய இசிதோர் ஆலயம், ஏழாலை தூய திரேசம்மாள் ஆலயம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி தூய செபமாலை அன்னை ஆலயம் என்பன ஒரே பங்காக அமைந்துள்ளன.
- மேலுள்ள ஆலயங்களை உள்ளடக்கியதாக பிரதான பங்காக சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயமே காணப்பட்டு வந்த போதும் அருட்தந்தை பா.பி.இராஜசிங்கம் அடிகளார் பங்குத் தந்தையாக இருந்த போது சுன்னாகம் ஆலய மக்களை சம்மதிக்க வைத்து குளமங்கால் தூய சவேரியார் ஆலயத்தை பிரதான பங்காக மாற்றினார்.
- எமது ஆலய “டோம்” கருங்கல்லால் கட்டப்பட்டது. இதற்கான வரைபடத்தை திரு.ஆசீர்வாதம் என்பவர் வரைந்தார். இவ்வரைபடம் மிகவும் விசாலமாக சிறப்பாக அமைந்தது. எனினும் அவ்வரைபடம் காணாமல் செய்யப்பட அவர் பின்னர் வரைந்த வேறு வரை படத்திற் கமைவாகவே “டோம்” மற்றும் ஆலயம் அமைக்கப்பட்டது.
- “டோம்”வளைவுகள்கம்பிகளால் கூடமைத்து பின் கருங்கற்களால் அடுக்கப்பட்டு கட்டப்பட்டது.
திருமதி.இராசகுமார்
- எமது ஆலயம் முன்பு மாமரச் சோலையாக காணப்பட்டது மிகவும் அழகு நிறைந்த ஆலய வளாகத்தில் பங்குத்தந்தையரின் நேரடி கண்காணிப்பில் மாலை வேளையில் ஒன்று கூடி விளையாடுவது வழக்கம். மாணவர்களின் கல்வியில் முன்னைய பங்குத்தந்தையர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் எமது பங்கு மக்களின் கல்வித் தரம் அதிகரித்ததோடு இறை அழைத்தல்களும் பெருக இதுவே காரணமாக இருந்தது.
திருமதி அருட்பிரகாசம் அதிசயராணி
- எமது பங்கு கலையில் சிறந்து விளங்கியது. பலித்த கனவு, கண்ணாடி முனை, ஊதாரிப் பிள்ளை உவமை, ஒளி என பல வேதாகம, சமூக கட்டமைப்பு நாடகங்கள் அரங்கேற்றப் பட்டுள்ளன.
- பலித்த கனவு நாடகம் யோசேப்புவும் அவர்களின் 11 சகோதரர்களும் பற்றிய வேதாகமக் கதை ஆகும் . அதில் தேவதாஸ், சூசைதாஸ், சிலுவேஸ்திரி, தங்கத்துரை, தங்ககுலம். சின்னத்துரை, கிறீஸ்துராசன், சந்தியாப்பிள்ளை, அமலதாஸ், சாந்தப்பர், திருச்செல்வம், எட்வேட், தைரியநாதன் போன்ற பலர் இதில் நடித்தனர். மேடை அலங்காரம் வேட ஒப்பனை என்பவற்றை எனது தந்தையான சவிரிமுத்து அவர்கள் மேற்கொள்வார். பீட அலங்காரம் என்பவற்றை திறம்படச்செய்வார்.
செவ்வி கண்டோர்:
திரு.சைமன் (Dip.in.Edu.(Art))
ஆசிரியர். யாழ். இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்.
திரு.அ.சேவியர் றவ்பாயெல்
தொழில்நுட்ப உதவியாளர் (ஆராய்ச்சி).
நெல் ஆராய்ச்சி நிலையம், விவசாயத்திணைக்களம், பரந்தன்.
தொகுப்பு : -திரு.அ.சேவியர் றவ்பாயெல்