புதுமைகளால் நிறைந்த புனிதரின் ஆலயம்
சுன்னாகம் நகரின் பாதுகாவலராகத் திகழும் புனித அந்தோனியாரின் பெயரிலுள்ள ஆலயம் பண்பாட்டு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் பழமையும், பெருமையும், புதுமையும் நிறைந்த தாகக் காணப்படுகின்றது.
இந்நகர் கத்தோலிக்கர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த இவ் ஆலயத்தின் பல வரலாறுகள் வாய்மொழி வழியாகப் பேணப்படுகின்ற போதும் அதன் கருப்பொருள் மாறாது.மெய்மை மங்காது வரலாறு பேணப்படுவது பல தரப்பினரிடமும் பெற்ற செவ்வியின் ஒருமைத்தன்மை மூலம் உணரப்படுகின்றது.
எமது ஆலயத்தின் வரலாற்றுப் பொக்கிசங்களாக இருந்தவர்களின் மறைவுகள் சில வரலாற்று சுவடுகளை ஆதரப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளியதால் சில வரலாறுகள் மறைந்திருக் கக்கூடும். எனினும் தற்போது எம்மருகில் வாழும் மூத்தோர்களின் உதவியுடன் இவ்வரலாறுகளை தொகுக் கின்றோம்.
இதன்படி திருமதி, பாக்கியநாதர் றொசாரியோ ராணி அவர்களிடம் இருந்து பெற்ற நினைவு களின் சங்கமமும், வாய்வழி வரலாறும் இங்கு தொகுக்கப்படுகின்றது.
தீயில் கருகா திருச்சொரூபம்
வரலாறுகளில் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சுன்னாகத்தின் ஆதிக் கிறிஸ்தவர்களின் பாதுகாவலராக பரிந்துரை செய்து குடிசைக் கோவிலில் கொலுவிருந்தவர் தூய காணிக்கை மாதா.
அக்காலத்தில் சமயங்களுக்கிடையில் இருந்த புரிந்துணர்வின்மையால் பிறமத சகோதரர்கள் சிலர் இவ்வாலயத்தை தீயிட்டு எரித்தனர். இதன்போது ஆலயம் முற்றாக தீக்கிரையானது. இரவு நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த போது தமது தேவாலயம் தீப்பிடித்ததை அறிந்த கத்தோலிக்கர்கள் அனைவரும் ஆலய வளவுக்குள் வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருந்தனர்.
இதற்கிடையில் கோவிலை தீயிட்டவர்களில் ஒருவருக்கு தப்பிச் செல்லும் வேளையில் பார்வை மங்கத் தொடங்கியது. இதனால் அவர் வழிதவறி ஆலயக் கிணற்றுக்குள் விழுந்து தன்னை காப்பாற்றுமாறு அலறியுள்ளார்.
ஆலயத்தில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவரது அலறல் சத்தம் கேட்டிருக்கவில்லை.
அப்போது அங்கிருந்த ஒருவர் அனைவரது கூச்சலுக்கும் மேலாக “அடேய் … கோயில் முழுக்க எரிஞ்சாலும் அந்தோனியார் கூடும் சொரூபமும் எரியாமல் இருக்குதெடா…அதைத் தூக்கு வோம்” எனக் கூறிய போது எரிகின்ற ஆலயத்தினுள் எவ்வித தீ அனர்த்தமும் நேராத விதமாக காப்பாற்றப்பட்ட அத்திருச்சொரூபத்தையும், கூட்டையும் அனைவரும் மீட்டு வந்தனர். அவர்கள் தீயினுள் நடந்து சென்ற போதும் காலில் தீக்காயம் ஏற்படவில்லை.
இதன் பின்னரே கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தவரை தூக்கியெடுத்தனர். இவ்வாறு அனலால் அழிக்கப்பட்ட அன்னையவள் ஆலயத்தில் அன்னையின் விசேட அன்பைப் பெற்றவர் என புகழப்படும் தூய அந்தோனியாரின் திருச்சொரூபமும் தீயில் கருகாத புதுமை நிகழ்ந்த தையடுத்து புதிதாக ஆலயம் அமைக்கும் போது தூய அந்தோனியார் ஆலயமாக அதை நிர்மாணித்தனர்.
கடலில் மிதந்து வந்த ஆலயத் தூண்கள்
மிகவும் சிறிதாக அமைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியாரின் ஆலயத்தில் திருப்பலிகள் தொடர்ந்து இடம்பெற்றதாக இல்லை. எனினும் செவ்வாய்க்கிழமைகளில் பூசைத் தியானம் வாசித்தல். செபமாலை சொல்லுதல் போன்ற பக்தி முயற்சியிலும் இம்மக்கள் ஈடுபட்டுத் தமது பக்தியை வளர்த்து வந்தனர்.
இவ்வாறான சூழலில் இம்மக்களின் பிரதான தொழிலாக நெசவுத் தொழில் காணப்பட்டதுடன் இரட்டு எனப்படும் பாய்மரக்கப்பலுக்கான பாய் நெசவின் மூலம் தயாரித்து திருகோணமலை உள்ளிட்ட தூர இடங்களிற்குக் கொண்டு சென்று அவற்றை விற்பனை செய்தும் வந்துள்ளனர்.
இவ்வாறாக நாகர் என்பவரும் அவருடன் சிலரும் ரட்டு விற்பனை செய்ய திருகோணமலை நோக்கி கால்நடையாகவும், மாட்டுவண்டில் மூலமும் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு சென்று கூடாரங்களை அமைத்து தங்குவது வழக்கம். அதேபோன்று போகும் வழியில் உணவைத் தாமே தயாரித்து உண்பார்கள்.
வழக்கம் போல் ஒருமுறை திருகோணமலைக்குச் சென்ற போது நாகரிற்கு வயிற்றுப்போக்கு, வாந்தி என்பன வந்து நோய்வாய்ப்பட்டார். எனவே அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முடியாது என கடற்கரையில் தூக்கி வீசிவிட்டனர்.
அச்சந்தர்ப்பத்தில் சுன்னாகத்தில் இருந்த கன்னர் என்பவர் ஒரு சுனவு கண்டார். அதில் அவர் மணல் படிந்த சப்பாத்துடன் ஒருவர் வந்து அவரைத் தட்டி “உன் மச்சான் நாகர் அங்கு நோய் வாய்ப்பட்டு கிடந்தான் அவனுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தி விட்டு வருகிறேன். என் சப்பாத்திலுள்ள மண்ணை எடுத்து உன் ஊரிலுள்ளவர்களுக்கும் கொடு. இது தான் அவர்களின் பிணிக்கு மருந்து” எனக் கூறிவிட்டு செல்கிறார் என கனவு கண்டு விழித்து உடனடியாக ஆலயத்துக்கு ஓடிச் சென்ற போது அங்கு அந்தோனியாரின் கூட்டில் மணல் குவிந்திருப்பதைப் பார்த்தார். இதை அறிந்த ஊரவர்கள் கோவிலில் கூடி நின்றனர்.
இதன் பின் நாகர் ஊருக்கு வந்தபோது அனைவரும் நடந்த அதிசயத்தை கூறிய போது அவரும் தமக்கு நிகழ்ந்ததை கூறினார். தாம் நோய்வாய்ப்பட்டு மோசமான நிலையை அடைந்த போது குருவானவர் ஒருவர் கடல் நீரை வாயில் விட்டு “நீ எழுந்து ஊருக்கு செல். ஆபிரிக்கக் காட்டில் வெட்டப்பட்டுக் கடலில் போடப்பட்ட காட்டுமரங்கள் காங்கேசன்துறையில் கரையொதுங்கியுள்ளன. அதை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்குக் கொண்டு செல்” என கனவு கண்டதாகக் கூறி உடனடி யாகவே காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டு கனவில் சொல்லப்பட்டவாறே 14 காட்டு மரங்கள் கரை யொதுங்கியிருப்பதைக் கண்டு அதை முஸ்லிம் ஒருவரின் மாட்டு வண்டியில் போட்டுக்கொண்டு சுன்னாகத்திற்குக் கொண்டு வந்து ஆலயத்தில் வைத்தார். மாட்டுவண்டில் உரிமையாளரான அம் முஸ்லிம் நபரும் தனக்கு பணம் எதுவும் வேண்டாம் போகும் வழியில் தான் இதை இறக்கிவிட்டேன் என தெரிவித்துச் சென்றார்.
பின் குறித்த 14 காட்டுமரங்களையும் தூண்களாகப் பயன்படுத்தி புதிய ஆலயம் ஒன்றை வடக்குத் திசை பார்த்தபடி அமைத்தார்கள்.
வேறு ஒருநாள் நாகரிற்கு இன்னுமோர் சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போன்று வெளிமாவட்டங் களிற்கு சென்று நெசவு உற்பத்திகளை விற்றுவிட்டு கால்நடையாக ஊரை நோக்கி நடந்து வந்தார். அவர் செம்பியன்பற்று தாளையடிப் பகுதியை அடைந்தபோது திருடர்கள் அவரை நோக்கி வருவதைக கண்டார். உடனே அவர் தன்னிடமுள்ள பணப் பையை நிலத்தில் போட்டுவிட்டு அதற்கு மேலே குப்புறப்படுத்துக் கொண்டார். அவரது கண்ணில் தூய சந்தியோமையார் ஆலயம் தென்படவே “சந்தியோமையாரே என்னைக் காப்பாற்றும் உமக்கு தேர் செய்து தருகின்றேன் என எண்ணிக் கொண்டார்.
உடனே வெள்ளைக் குதிரையில் ஒருவர் இவரைச் சுற்றி வலம் வந்தார். இதைக் கண்டதும் திருடர்கள் ஓடிவிட்டனர். பின்னர் இவர் அவ்வாலயத்திற்கு தேர் ஒன்றைச் செய்து வழங்கினார். இவ்வாறு அவர்கள் விசுவாசத்தில் மேலோங்கி வளர்ந்தனர்.
மரப்பொந்தினுள் மறைந்திருந்த சொரூபம்
மீள நிர்மாணிக்கப்பட்டதூய அந்தோனியார் ஆலயத்தில் தூய செபஸ்ரியாரின் திருச்சொரூபம் ஒன்றும் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தது. அச்சொரூபத்தை தான்தோன்றி செபஸ்ரியார் சொரூபம் என்றே அழைத்து வந்தனர்.
இச்சொரூபத்தின் பாதங்களைக் கழுவி அந்நீரினை அருந்தும் பலர் நோய் பிணிகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.
இவ்வாறு பல புதுமைகள் இடம்பெற்று வரும் நிலையில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மிகவும் வறுமைப்பட்ட மோசஸ் எனும் சிறுவன் நெசவில் ஈடுபட்ட வேளையில் அவரது மாமன் ஒருவர் அச்சிறுவனை தாக்கியுள்ளார். இதையறிந்த மோசஸ்இன் தாய் ஆலயத்திலுள்ள செபஸ்ரியார் சொரூபத்திற்கு முன் வந்து “பசியுடன் நின்ற பிள்ளையை அடித்துப் போட்டார்கள்” எனக் கதறி அழுதுள்ளார். இதன்போது குறித்த செபஸ்ரியாரின் சொரூபத்திலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்துள்ளது.
பிற்பட்ட காலங்களில் இங்கு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் இச்செபஸ்ரியார் சொரூபத்தை மாட்டுவண்டியில் கொண்டு சென்று மாகியப்பிட்டிப் பகுதியில் மறை பரப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது மாகியப்பிட்டி பகுதியில் பலர் இச் செபஸ்ரியாரின் திருச்சொரூபத்தின் மூலம் அருள்வரங்கள் பெற்றதுடன் பலர் மனம் மாறிக் கத்தோலிக்க சமயத்தை தழுவிக் கொண்டனர்.
அதன் காரணமாக அப்பகுதியிலேயே ஓர் ஆலயம் அமைத்து இச்சொரூபத்தை அங்கேயே வைத்து வணக்கம் செலுத்தத் தொடங்கினர். தற்போது மாகியப்பிட்டி தூய செபஸ்ரியார் ஆலயத் திலுள்ள செபஸ்ரியாரின் திருச்சொரூபமே அன்று சுன்னாகத்திலிருந்து கொண்டு சென்ற சொரூப மாகும்.
முன்னோரின் கணிப்பின்படி இதுவும் போத்துக்கீசர் காலத்திற்குரிய திருச்சொரூபமாக இருந்திருக்கலாம் என்பதுடன் ஒல்லாந்தர் காலப் பகுதியில் இதுவும் மரப்பொந்தினுள் மறைத்து வைத்திருக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
மீண்டுமாய் குடிபுகுந்தாள் தேவ அன்னை
போத்துக்கீசரின் காலத்திலேயே போத்துக்கல்லிலிருந்து கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் தேவ அன்னையின் திருச்சொரூபம் ஒன்று இருந்தது. அது ஒல்லாந்தர் காலத்தில் மண்ணிற்குள் புதைந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அத்திருச்சொரூபம் கண்டுபிடிக்கப்பட்டு தேவாலயத்தில் வைக்கப்பட்டது. எனினும் அத்திருச்சொரூபம் எப்பெயர் கொண்டு அழைக்கப்பட வேண்டுமென ஆலய மக்களுக்கு தெரிய வில்லை. எனவே ஆலயத்தில் வைத்துப் பொதுவாக வணக்கம் செலுத்தி வந்தனர்.
ஒருநாள் மரியே என்பவருக்கு கனவில் தோன்றிய அன்னை மரியாள் “நாம் சென்ம பாவமில் லாமல் உற்பவித்த தாய்” எனக் கூறியதோடு தனக்கு பசிக்கிறது எனவும் கூறியுள்ளார். இதன் பின் அவ் அன்னைக்கு மார்கழி மாதம் 8ம் திகதி திருவிழா ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருநாளன்று விருந்து வழங்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர். அத்தோடு காலையில் உத்தரிய மாதாவிற்கு செபமாலையும் சொல்லி வந்தனர்.
போத்துக்கல்லிலிருந்து கொண்டுவரப்பட்ட மரத்திலான திருச்சொரூபம் தற்போதும் ஆலயத்தின் சிங்காசனத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இது மரத்தினாலான சொரூபம் ஆகும்.
இவ்வாறு பல புதுமைகள் முற்காலத்தில் இடம்பெற்றதாக செவ்விகளின் மூலம் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. இதற்குப் பின்னரும் இந்நாள் வரையிலும் பலகோடி அற்புதங்கள் அவ்வாலயத்தில் இடம்பெற்று வந்துள்ளன.
செவ்வி கண்டோர் : திரு. சைமன் (ஆசிரியர்) திரு.அ. சேவியர் றவ்பாயெல்
தொகுப்பு: திரு. அ. சேவியர் றவ்பாயெல், தொழில்நுட்ப உதவியாளர் (ஆராய்ச்சி) விவசாயத் திணைக்களம், பரந்தன்.