சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலய சிம்மாசனம்
புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்
போத்துக்கல் நாட்டுத் துறவற சபையினர்களான பிரான்சிஸ்கன் சபையினர், இயேசு சபையினர், அகுஸ்தீனார் முதன்முதலில் கத்தோலிக்க மறையைப் பரப்பிய சிறப்பிற்குரியவர்கள். இவர்கள் கத்தோலிக்க மறையைப் பரப்புவதற்குப் பொருத்தமான சில ஊடகங்களைப் பயன்படுத்தி யுள்ளனர். அவ்வாறு பயன்படுத்திய ஊடகங்களாகத் திருவருட்சாதனங்களை நிறைவேற்றியமை. வழிபாடுகளை நடத்தியமை, பக்தி முயற்சிகளை அறிமுகம் செய்து கடைப்பிடிக்கத் தூண்டியமை, மனித நேயப் பணிகளை முன்னெடுத்தமை, பாடசாலைகளை நிறுவிக்கல்வி வழங்கியமை, இலக் கியங்களை உருவாக்கியதோடு நாடகங்களையும் ஏனைய கலையம்சங்களையும் பயன்படுத்தியமை குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியவையாகும். சுருங்கக் கூறினால் இலங்கையில் ஐரோப்பா மயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கமே பரப்பப்பட்டது. இது இலங்கைக் கத்தோலிக்க மறையில் கணிசமான ஐரோப்பியக்கலை அம்சங்கள் செல்வாக்குச் செலுத்த வழிவகுத்தது.
ஒல்லாந்தர் காலத்தில் மறையைப் பரப்பிய இந்திய ஒரற்ரோறியன் குழுமத்தைச்சார்ந்த குழுக்கள் தம் காலத்தில் நிறுவிய கத்தோலிக்க ஆலயங்களின் கட்டடக்கலையம்சத்தில் ஒரற்ரோறியன் ஆலயக்கட்டட அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பணியாற்றிய அமலமரித்தியாகிகள் கலைக்குருக்களும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்ததன் காரணமாக அவர்கள் வழியாக ஐரோப்பியக் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் இலங்கை கத்தோலிக்க திருச்சபையில் மீள் அறிமுகம் பெற்றன.
இச்சிறிய கட்டுரையில் ஐரோப்பிய ஆலயக் கட்டடக்கலையின் பலிபீடம் அத்துடன் நெருங்கிய முறையில் தொடர்புபட்ட சிம்மாசன கலையம்சங்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின்பு பலிப்பீடத்திலும் குறிப்பாகச் சிம்மாசனங்களிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னும் விடயங்கள் சிறியளவில் ஆராயப்படுகின்றது.
இலங்கையில் உள்ள ஆலயங்களின் கட்டடக்கலையமைப்பினை நோக்கும்போது கலை உரோமையக் கட்டடக் கலையமைப்பு முறைகளை உள்வாங்கியே அமைக்கப்பட்டன இப்பின்னணியில் 1842இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (இரண்டாம் ஆலயம்) ஒரற்ரோறியன்) கட்டடக் கலையமைப்பிலேயே கட்டப்பட்டிருக்கின்றது. அருட் பணிஜென் (Jean) அ.ம.தி அடிகள் (1902-6) ஆகிய காலப்பகுதியில் இவ்வாலயத்திற்கான திருப்பீட முற்றப் பகுதியை மீள் புனரமைப்புச் செய்தார் என சுவாமி ஞானப்பிரகாசர் கூறியுள்ளார். (SAG.660) இவ்வாலயத்திற்கான திருப்பீடமுற்றம் (Sanctnary) இரண்டாம் வத்திக்கான் சங்கம் சுட்டப்படுவதற்குமுன்பு அமைக்கப்பட்ட திருப்பீட முற்ற அமைப்பை ஒத்ததாகவே அமைககப்பட்டிருந்தது. இதன் படி பலிபீடமும் அதனுடன் இணைத்ததாகவே சிம்மாசனமும் ஒன்றாகவே அமைக்கப்பட்டிருந்தன. 2ஆம் வத்திக்கான சங்கத்தின் முன்பு ஏற்பட்டிருந்த அமைப்பின்படி குரு மக்களை நோக்கியபடி அல்லது சிம்மாசனத்தை நோக்கிய படியே பலி ஒப்புக் கொடுத்தார். இதனால் மக்கள் திருப்பலி வேளையில் குருவின் முதுகுப்பகுதியையே பார்த்ததாகவே பலி முறைமை அமைந்திருந்தது. இதனால் குருவும் மக்களும் ஒருவரையொருவர் பார்க்கும் முறைமை இருக்கவில்லை
இப்பின்னணியிலேயே இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட பளிப் பீடமும் அதனோடு இணைந்த சிம்மாசனமும் நோக்கப்பட வேண்டும். மேலும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்கள் வணக்கத்திற்கும் கணிசமான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இப்பின்புலத்தில் சிம்மாசனங்களின் அமைப்பை நோக்கும்போது அவை ஐரோப்பியக் கட்டிட சிற்பக்கலையம்சங்களை உருவாக்கியதோடு சிம்மாசனத்தில் பல புனிதர்களின் கரூபங்களை வைக்கக்கூடிய வகையில் பெரியவனாகவும் சிறந்த வேலைப்பாடுகளை கொண்டவையாகக் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுடன் இணைந்தவையாக புனிதர்கள் திருச் சுரூபங்கள் வைக்கக்கூடிய கூடுகளும் காணப்பட்டன. இவ்வாறான விடயங்கள் சிம்மாசனத்திற்கு சிறப்பளித்தன. ஆலயங்களின் அளவிற்கேற்பவும் பங்கின் பொருளாதார வசதிக்கேற்பவும். சித்திர வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின்பு பலிப்பீடத்தின் அமைப்பிலும் சிம்மாசனத்திலும் கணிசமான மாற்றங்களிலும் காணப்படுகின்ற சிம்மாசனத்தையும் பலிபீடத்தையும் சற்று உன்னிப்பாக அவதானிக்கும்போது இடம்பெற்ற மாற்றங்களை இனங்கண்டு கொள்ளலாம் சிம்மாசனத்திற்கும் பலிபீடத்திற்கும் மிடையே குறைந்தது (4-6) அடி இடைவெளி பொதுவாகக் காணப்படுகின்றது. இவ்இடைவெளிப்பகுதியில் நின்றே குரு மக்களை நோக்கிய வண்ணம் திருப்பலியை ஒப்புக்கொடுக்கின்றார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு குரு இவ்வாறு மக்களை நோக்கியவாறு திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அமைப்பு இருக்கவில்லை இரண்டாம் பாரிய முற்போக்குகளை மாற்றங்களில் இம்மாற்றமும் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டும். இத்தோடு இணைந்ததாக அறிமுகம் பெற்ற சுதேச மொழிகளில் திருப்பலி ஒப்புக்கொடுப்பது மற்றுமோர் முற்போக்கான மாற்றமாகும்.
இவ்வாறு சிம்மாசன அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்திற்கு மற்றுமோர் விடயம் இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதாவது புனிதர் வணக்கம் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் முன்வைத்த பரிந்துரை அதன்படி திருவழிபாட்டு எண் 125 கீழ் கண்டவாறு குறிப்பிடப்படுகின்றது. ”நம்பிக்கை கொண்டோரின் வணக்கத்திற்காகக் கோவில்களில் திரு உருவங்களை வைக்கும் பழக்கம் நிலைத்து நிற்கட்டும். எனினும் கிறிஸ்தவ மக்களிடையே வியப்பைத் தூண்டி எழுப்பாமலும் பொருத்தக்குறைவான பக்தியில் அவர்கள் ஈடுபட்டாலும் இருக்குமாறு இத்திரு உருவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அவற்றை வைப்பதில் பொருத்தமான ஒழுங்கையும் பின்பற்ற வேண்டும்”
எண் 111 இன் படி “மரபின் படி தூயவர்களுக்குத் திருச்சபையில் வணக்கம் செலுத்தப் படுகிறது. இவர்களின் உண்மையான திருப்பொருள்களுக்கும், உருவங்களுக்கும் மதிப்பு வியத்தகு செயல்களைத் தூயவர்களின் திருவிழாக்கள் பறைசாற்றுகின்றன: பின்பற்று வதற்கெனத் தகுந்த எடுத்துக்காட்டுகளை நம்பிக்கை கொண்டோருக்கு அளிக்கின்றன .
நிறைவாழ்வின் மறைபொருளை நினைவுக்கு கொணரும் திருவிழாக்களை விடாயவர் களின் திருவிழாக்கள் முதன்மை பெறாதிருக்கும் பொருட்டு அவற்றுள் பலவற்றை தனிப்பட்ட சபையின், நாட்டின், துறவற இல்லத்தின், கொண்டாட்டங்களுக்கு விட்டுவிட வேண்டும் உண்மையிலேயே பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்த தூயவர்களை நினைவு கூறும் திருவிழாக்களை மட்டும் திருச்சபை முழுவதிலும் கொண்டாட வேண்டும்”
மேற்குறிப்பிட்ட இரண்டு எண்களிலும் கூறப்படுகின்ற விடயங்கள் புனிதர்களுக்கு அளிக்கப்படும் வணக்கம் பொருத்தமானவையாக அமையவேண்டும். மற்றும் திரு உருவங்களின் எண்ணிக்கை குறைவேண்டும் எனக்கூறும் ஏடு அதே எண்ணில் நம்பிக்கை கொண்டோரின் வணக்கத்திற்காக கோவில்களில் திரு உருவங்களை வைக்கும் பழக்கம் நிலைத்து நிற்கட்டும் எனவும் கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட பின்னணியில் சங்கம் தூயவர்களுக்குச் செலுத்தப்படும் வணக்கம் பற்றியும் தூயவர்களின் திருவிழாக்கள் பற்றியும் முன்வைத்த கருத்துக்கள் இலங்கைத்திருச்சபையின் தலைப்பீடத்தினாலும் குருக்களாலும் சரியாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ளனவா என்னும் வினா மிகப்பொருத்தமானதாகவே தென்படுகின்றது. சங்கம் முன்வைத்த சீர்திருத்தம் மாற்றம் என்னும் பெயரில் பல ஐரோப்பிய மரபிலான கலைச்சின்னங்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாக இம்மாற்றங்கள் பலிபீடத்துடன் அமைந்திருந்த சிம்மாசனத்திலேயே இடம்பெற்றன காலகாலமாகவே கவனத்துடன் பேணப்பட்டு வந்த சிம்மாசனங்கள் கழிக்கப்பட்டன அல்லது சிறயவையாக மாற்றியமைக்கப்பட்டன சீமேந்தினால் அல்லது மரங்களில் செதுக்கப்பட்டவை சிம்மாசனங்களை இவ்வாறு அழிக்காமலே அல்லதுவெட்டிக்குறைக்காமலே சங்கம் முன்வைத்த பரிந்துரைகளைநடைமுறைப்படுத்தியிருக்கலாம். இதற்கு சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலய சிம்மாசனம் சிறந்த எடுத்துக்காட்டு.
அதே வேளையில் திருக்கலையையும் திருவழிபாட்டு பொருட்களையும் மாண்புடன் பேணப்பட வேண்டுமென்னும் சங்கத்தின் புரிந்துரையும் இங்கு கோடிட்டுக் காட்டப்படவேண்டும். திருவழிபாட்டு எண் 122 இன் படி “மனிதரின் கூரறிவு தோற்றுவித்தவைகளில் மிக மேன்மையானவையாக எண்ணப்படத் தகுந்தவை கவின் கலைகள் எனத்துணிந்து கூறலாம். சமயக்கலையும் இந்த சமயக்கலையின் சிகரமாகிய திருக்கலையுமே இவற்றுள் சிறப்பு மிக்கன. இயல்பாகவே இவை கடவுளின் எல்லையற்ற எழிலோடு தொடர்புடையன. இவ்வெழில் மனிதப்படைப்புச் செயல்களில் ஒரு வகையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். இவை தம் படைப்புக்களால் மக்களின் இதயங்களைப் பக்தியுடன் கடவுள்பால் திருப்புவதேயன்றி வேறு எந்தக் குறிக் கோளையும் கொண்டிருக்கவில்லை. ஆதலால் கடவுளுக்கும் அவரது புகழ்ச்சியையும் மாட்சியையும் வளர்ப்பதற்கும் அவை மிகவும் பொருத்தமானவை.
ஆகவே, அன்புத் தாயாம் திருச்சபை களின் கலைகளை என்றும் ஆதரித்து வந்துள்ளது. சிறப்பாகத் தூய வழிபாட்டைச் சார்ந்த பொருள்கள் உண்மையிலேயே தகுதியும் தகைமையும் வனப்பும் கொண்டிருக்க வேண்டும்: இவை விண்ணகப்பொருள்களின் குறிகளாகவும் அடையாளங்களாகவும் விளங்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் திருச்சபை கவின் கலைகளின் மேன்மைமிக்க பணியை என்றும் நாடியுள்ளது: கலைஞர் களுக்கும் பயிற்சி அளித்துள்ளது. கலைகளைக் குறித்து முடிவெடுக்கும் உரிமை தனக்கு உண்டு எனத் திருச்சபை என்றும் கருதி வந்துள்ளது முறையே எனவே கலைஞர்களின் படைப்புகளிலே நம்பிக்கை இறைப்பற்று சமய உணர்வுடன் மரபு வழிவந்த விதிகள் ஆகிய வற்றிற்கு ஏற்ப அமைத்துத் திருவழிபாட்டில் பயன்படும் தகுதி வாய்ந்தவற்றைத் திருச்சபை தேர்ந்துகொண்டுள்ளது.
திருவழிபாட்டின் சிறப்புக்கு அதில் பயன்படும் திருப்பொருள்கள் தகுதியுடனும் எழிலுடனும் உறுதுணை புரிய திருச்சபை தனி அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்துள்ளது. இப்பொருள்களின் செய்பொருளிலோ, உருவிலோ, அழகொப்பனையிலோ தொழில் நுட்பக் கலையின் வளர்ச்சி காலப்போக்கிலே புகுத்தியுள்ள மாற்றங்களைத் திருச்சபை ஏற்றுக்கொள்கிறது”
சங்கத்தின் பின் பல ஆலயங்களிலுள்ள சிம்மாசனங்களில் பொருத்தமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகச்சில ஆலயங்களில் மட்டும் சிம்மாசனங்களும் அவற்றின் கலையம்சங்களும் அப்படியே பேணப்படுகின்றன. இந்த இடத்தில் சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலய சிம்மாசனம் எந்த வித மாற்றத்திற்கும் உட்படுத்தப்படாமல் பேணுகின்ற கைங்கரியம் விதந்து பாராட்டப்படவேண்டியது. இச்சிம்மாசனம் கோதிக்கலையம்சத்தைக்கொண்டு சிறந்த சித்திர வேலைப்பாடுகளுடன் மரத்தினால் ஆக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்த கலைஞர்களின் படைப்பாற்றல், கலை நுட்பங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இச்சிம்மாசனம் பற்றிய ஏனைய ஆதார பூர்வமான வரலாற்றுக்குறிப்புக்களைப் பெறமுடியாதுள்ளது. இருப்பினும் இச்சிம்மாசனத்தை தொடர்ந்து பேணிக்காப்பது இப்பங்கு மக்களின் பாரிய பொறுப்பாகும்.
அருட்பணி நா.பிலேந்திரன்