தகவல் – பாக்கியத்துரை
பெரிய நற்கருணை விழா – 1958
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 1958 ஆண்டு பெரிய நற்கருணை விழா அன்றைய காலத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி பெனட் கொன்ஸ்ரன்ரைன் அடிகளார் காலத்தில் நடைபெற்றது. எமது பழைய ஆலயத்தின் முன்பக்கமாகவுள்ள மைதானத்தில் பந்தல்கள் போடப்பட்டு நற்கருணை விழா நடைபெற்றது. அங்கே மூன்று பந்தல்கள் போடப்பட்டன.
01. குடைப்பந்தல்
02. நட்சத்திரப் பந்தல்
03. தட்டிப் பந்தல்
என்று மூன்று பந்தல்கள் போட்டப்பட்டன. இப்பந்தலுக்கான செயற்பாடுகளை அருட்பணி றொபின்சன் ஜோசப் அடிகளாரின் தந்தையாரான அமரர்.அ.அருளப்பன் தலைமையில் நடைபெற்றன. அன்றைய காலத்தில் பெருந்தொகையான காட்டுத் தடிகள் கொண்டு வந்து ஆலய வளவில் பறிப்பார்கள். பனை ஓலைகளும், கிடுகுகளும் கொண்டுவந்து பறிப்பார்கள். அதன் மூலமாக இப்பந்தல்களை அமைப்பார்கள்.
கண்டியில் இருந்து இயற்கை மலர்களைப் புகையிரத மூலமாக சுன்னாகம் புகையிர நிலையத்திற்கு கொண்டு வந்து சிறிய சிறிய மரப்பெட்டிகளில் அடுக்கி அன்றைய காலத்தின் இளைஞர்கள் எமது ஆலயத்திற்கு கொண்டு வந்து பந்தல்களை அலங்கரிப்பார்கள்.
குடைப்பந்தல்கள் என்பது திருப்பலிப்பீடத்துக்கானது. இங்கு நற்கருணை எழுந்தேற்றம் செய்து வழிபாடுகள் நடைபெறும். நட்சத்திரப் பந்தல் என்பது அருட்தந்தையர்களுக்குரியது. தட்டுப்பந்தல் என்பது அருட்சகோதர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்குமான அமைக்கப்பட்டது.
நற்கருணை வழிபாடானது இயந்திரத் தேரில் பழைய ஆலயத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமாகி புனித அந்தோனியார் வீதி வழியாக எடுத்து வரப்பட்டு, காங்கேசன்துறை வீதியில் ஒரு பக்கமாகப் போடப்பட்டிருக்கும். சிறிய பந்தலில் சில நிமிடங்களில் தரித்து நின்று ஆராதனை நடைபெறும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதியூடாக சுன்னாகம் வாழைக்குலைச் சந்தையில் அமைக்கப்பட்டிருக்கும். பிரமாண்டமான பந்தலில் இருக்கும். பீடத்தில் நற்கருணை வைக்கப்பட்டு அங்கு செபங்கள், ஆராதனைகள், மறைபுரைகள் நடைபெறும். பின்பு அங்கிருந்து நற்கருணையை இயந்திரக் தேர்மூலமாக எடுத்து வரப்பட்டு டாக்டர். சுப்பிரமணியம் வீதியூடாக ஆலயத்தை வந்தடையும்.
இந்த நற்கருணை வழிபாடானது அன்றைய காலத்தில் கண்கொள்ளாக் காட்சியாக, பிரமாண்டமான நிகழ்ச்சியாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நற்கருணை சுற்றுப்பிரகார வழிபாட்டிற்கு அச்சுவேலி மடத்திலிருந்து அருட்சகோதரிகளும், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாகவும், மாணவர்கள் உலக நாடுகளின் தேசிய கொடிகளை ஏந்தியவண்ணமாக அந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. நற்கருணை ஆசிர்வாத நேரம் மாணவர்கள் உலகத்தின் தேசியக்கொடிகளை உயர்த்தி முன்பக்கமாகச் சரிந்து பிடிந்திருந்தாகச் சொல்லப்படுகின்றது.
இத்தகைய பிரமாண்டமான ஒரு நற்கருணை விழாவினை அருட்பணி பெனட் கொன்ஸ்ரன்ரைன்; அடிகளார் அருட்பணி அன்ரன் இராசநாயகம், அருட்பணி பாலசுந்தரம் அடிகளார் ஆகியோர் ஒழுங்குபடுத்தி நடத்தினார்கள். யாழ் மறைமாவட்ட அனைத்து குருக்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. இவ்விழாவிற்கு முன்னாள் ஆயர் அமரர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் உத்தரவின்படி நடைபெற்றது. இவ்வழிபாடு முடிந்த பிற்பாடு அனைவருக்கும் அமரர் சிங்கராயர் வரப்பிரகாசம் (S.D.W) தலைமையில் விருந்துபசார நிகழ்வும் நடைபெற்றது.
தொகுப்பு :- எம். யோண்பற்றிக்
